ADDED : ஆக 12, 2025 11:10 PM
தொண்டி: தபால் அலுவலக ஆய்வாளர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காதல் தோல்வியா என போலீசார் விசாரிக்கின்றனர்.
மத்தியபிரதேசம் மாநிலம் சாகார் மாவட்டம் பசந்த்விஹார் காலனியை சேர்ந்தவர் ஆர்யா மகன் பங்கஜ்ஆர்யா 24. திருமணம் ஆகவில்லை. திருவாடானை தபால் அலுவலகத்தில் தபால் ஆய்வாளராக ஒரு ஆண்டிற்கு முன்பு பணியில் சேர்ந்தார்.
தொண்டியில் அப்பல்லோ மருந்துக்கடை பின்புறம் உள்ள காம்ப்ளக்சில் வாடகை அறையில் தங்கியுள்ளார்.
நேற்று காலை திருவாடானை தபால் அலுவலகத்திற்கு அவர் பணிக்கு வரவில்லை. அவருடன் பணியாற்றும் இரு நண்பர்கள் அலைபேசியில் தொடர்பு கொண்டனர். ஆனால் அவர் தொடர்பு கொள்ளாமல் இருந்ததால் சந்தேகம் அடைந்தனர்.
அதனை தொடர்ந்து நண்பர்கள் இருவரும் பங்கஜ் ஆர்யா தங்கியிருந்த அறைக்கு சென்றனர். உள் பக்கமாக பூட்டியிருந்தால் கதவின் மேல் உள்ள கம்பியை அறுத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அங்கு பெண்கள் அணியும் துப்பட்டாவில் துாக்கிட்டு பங்கஜ் ஆர்யா இறந்து கிடந்தார். தொண்டி போலீசார் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டாரா என விசாரிக்கின்றனர்.