பரமக்குடியில் 3 மாதமாக மின் பராமரிப்பு பணிகள் ஒத்திவைப்பு
பரமக்குடியில் 3 மாதமாக மின் பராமரிப்பு பணிகள் ஒத்திவைப்பு
ADDED : செப் 21, 2026 12:52 AM
மின்தடை, ரத்து அறிவிப்பால் மக்கள் குழப்பம்
பரமக்குடி: பரமக்குடியில் மின்வாரியத்தால் மின்தடை மற்றும் ரத்து அறிவிப்பு அடுத்தடுத்த நாட்களில் வெளியிடுவதுடன் 3 மாதங்களாக பராமரிப்பு செய்யப்படாமல் உள்ளது.
பரமக்குடி காட்டுப்பரமக்குடியில் 110 கே.வி., உப மின் நிலையம் செயல்படுகிறது.
பரமக்குடி, சத்திரக்குடி, நயினார்கோவில் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு மின் சப்ளை செய்யப்படுகிறது.
இங்கு ஒவ்வொரு மாதம் மின்தடை அறிவிப்பு செய்யப்பட்டு பராமரிப்பு செய்வது வழக்கம். ஆனால் 3 மாதமாக மின்தடை அறிவிப்பு 5க்கும் மேற்பட்ட முறை வெளியிடப் பட்டது.
நிர்வாக காரணங்கள் என தெரிவித்து ரத்து செய்வதும் தொடர் கதையாகியுள்ளது.
இந்த அறிவிப்பை நாளிதழ்களில் வெளியிட நேர்வதால் மக்களிடம் உள்ள நம்பகத்தன்மையும் குறைகிறது.
மேலும் சிட்கோ துவங்கி நெசவாளர்கள், வணிகர்கள், பொதுமக்கள் மின் தடையை பொறுத்து மாற்று ஏற்பாடுகள் செய்வதால் எந்த பலனும் இன்றி சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
வெயில் வாட்டி வதைப்பதால் மின் தேவை அதிகரித்துள்ளது.
மேலும் திடீர் காற்று, மழை நேரங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாத சூழலில் மின் ஊழியர்கள் தவிப்புக்கு ஆளாகின்றனர்.
தொடர்ந்து உப மின் நிலையம் மற்றும் அனைத்து வகை டிரான்ஸ்பார்மர்களிலும் ஆயில் மாற்றுவது, பியூஸ் கம்பிகள் சரி செய்யப் படாமல் உள்ளதால் அசாதாரண நிலை நிலவு கிறது.
ஆகவே மின்தடை அறிவிப்பை முறையாக செய்வதுடன் அந்தந்த நாட்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
