ADDED : செப் 10, 2026 05:42 PM
திருவாடானை: திருவாடானை, தொண்டி பகுதியில் புரட்டாசி பிறக்க இருப்பதால் பெருமாளை தரிசனம் செய்ய பக்தர்கள் விரதம் இருக்க தயாராகி வருகின்றனர். ஆன்மிக சிறப்பு மிக்க புரட்டாசியில் அசைவம் தவிர்த்து பெருமாளுக்கு உகந்த சனிக்கிழமைகளில் வழிபாடு செய்வது வழக்கம். புரட்டாசி மாதம் பிறக்க இருப்பதால் திருவாடானை அருகே குளத்துார் குலசேகர பெருமாள், திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் உள்ள வரதராஜ பெருமாள், தொண்டி உந்திபூத்த பெருமாள், பாண்டுகுடி லட்சுமி நாராயணப் பெருமாள், ஆலம்பாடி கரியமாணிக்க பெருமாள் மற்றும் கிராமங்களில் உள்ள கோயில்களில் புரட்டாசி சனி அன்று சிறப்பு அபிேஷக ஆராதனைகளும், பூஜைகளும் விமரிசையாக நடைபெற உள்ளதால் பக்தர்கள் விரதத்திற்கு தயாராகி வருகின்றனர். பக்தர்கள் கூறியதாவது:
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. பெருமாளின் பூரண அருளைப் பெற இந்த மாதத்தில் விரதமிருந்து வழிபாடு செய்வது வழக்கம். பெருமாளுக்கு விருப்பமான துளசி மாலையிட்டு தீபம் ஏற்றி வழிபடும் போது குடும்பத்தில் உள்ள தடைகளும், நோய்களும் நீங்கி செல்வ வளம் பெருகும் என்றனர்.
––
