/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஸ்ரீராமர் பூஜித்த ராமேஸ்வரம் தலத்தில் பிரதமர் மோடி இன்று தரிசனம்
/
ஸ்ரீராமர் பூஜித்த ராமேஸ்வரம் தலத்தில் பிரதமர் மோடி இன்று தரிசனம்
ஸ்ரீராமர் பூஜித்த ராமேஸ்வரம் தலத்தில் பிரதமர் மோடி இன்று தரிசனம்
ஸ்ரீராமர் பூஜித்த ராமேஸ்வரம் தலத்தில் பிரதமர் மோடி இன்று தரிசனம்
UPDATED : ஜன 20, 2024 03:58 AM
ADDED : ஜன 20, 2024 01:28 AM

ராமேஸ்வரம்:ஸ்ரீ ராமர், ராவணனை வதம் செய்த பின் அந்த தோஷம் நீங்க சிவனை பூஜித்த ராமேஸ்வரம் கோயில் தீர்த்தங்களில் இன்று(ஜன.,20) பிரதமர் மோடி புனித நீராடி சுவாமி தரிசனம் செய்கிறார்.
ராமர் இலங்கை மன்னன் ராவணனை வதம் செய்து சீதையை மீட்டு ராமேஸ்வரம் வந்தார். சிவபக்தரான ராவணனைக் கொன்றதால் ராமருக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்குவதற்காக சிவபெருமானை பூஜை செய்ய முடிவெடுத்தார்.
இதற்காக சிவலிங்கம் எடுத்து வரச்சொல்லி ஹனுமனை கைலாய மலைக்கு சீதாதேவி அனுப்பினார். ஆனால் ஹனுமன் வர தாமதமானதால் சீதை கடற்கரை மணலில் சிவலிங்கம் வடிவமைத்து பூஜை செய்து அனைவரும் தரிசித்தனர். இங்கு ஸ்ரீ ராமர் சிவனை பூஜித்து வணங்கியதால் சுவாமிக்கு ராமநாதசுவாமி என பெயரிட்டனர்.
![]() |
பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீ ராமர் பூஜித்த இத்திருத்தலத்திற்கு நாடு முழுவதும் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். ஜன.,22ல் அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி விரதம் இருந்து வரும் பிரதமர் மோடி இன்று ராமேஸ்வரம் கோயிலில் அக்னி தீர்த்தத்திலும், கோயிலுக்குள் உள்ள 22 புனித தீர்த்தங்களிலும் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்ய உள்ளார். இந்த ராமாயண இதிகாச வரலாற்று திருத்தலம் குறித்து ராமேஸ்வரம் பஜ்ரங்தாஸ் பாபா மடம் நிர்வாகி மகராஜ் சீதாராம்தாஸ் பாபா கூறியதாவது:
ராமபிரான் சிவனை பூஜித்து வணங்கிய இடத்தில் உள்ள இக்கோயில் வளாகத்தில் 22 தீர்த்தங்கள் உள்ளன. இங்கு சிவனுக்கு அபிஷேகம் செய்வதற்காக பூமியில் ராமர் அம்பு எய்ததும் புனித தீர்த்தம் கிடைத்தது.
இது கங்கை, காவிரி உள்ளிட்ட பல புனித நதிகளின் தீர்த்தத்தை உள்ளடக்கிய தீர்த்தமாக கருதப்பட்டதால் இதனை 'கோடி தீர்த்தம்' (22 வது தீர்த்தம்) என்றழைக்கப்படுகிறது. இன்றும் இந்த தீர்த்தம் மட்டுமே கோயிலில் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.
கோதண்டராமர் கோயில்
அடைக்கலம் தேடி தனுஷ்கோடி வந்த ராவணன் தம்பி விபீஷணரை இலங்கை மன்னராக அறிவித்த ராமர் கடல் நீரால் பட்டாபிஷேகம் சூட்டுகிறார். சிவனின் ஆயுதமான கோதண்டம் (வில், அம்பு ) ராமரிடம் இருந்ததால் சிவ பக்தரான விபீஷணருக்கு பட்டாபிஷேகம் சூட்டியதால் இங்கு கோதண்ட ராமர் கோயில் உருவானது.
பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ராமர் பாதம் பதித்த ராமேஸ்வரம், தனுஷ்கோடியில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம் செய்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதன் மூலம் இக்கோயிலின் புனிதமும், புகழும், வரலாறும் உலகம் முழுவதும் சென்றடையும் என்றார்.