/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தேவை அதிகரிப்புடன் உற்பத்தியும் குறைவு பனங்கற்கண்டு கிலோ ரூ.1600க்கு விற்பனை
/
தேவை அதிகரிப்புடன் உற்பத்தியும் குறைவு பனங்கற்கண்டு கிலோ ரூ.1600க்கு விற்பனை
தேவை அதிகரிப்புடன் உற்பத்தியும் குறைவு பனங்கற்கண்டு கிலோ ரூ.1600க்கு விற்பனை
தேவை அதிகரிப்புடன் உற்பத்தியும் குறைவு பனங்கற்கண்டு கிலோ ரூ.1600க்கு விற்பனை
ADDED : அக் 14, 2024 04:34 AM

சாயல்குடி: சமீபகாலமாக இயற்கை மருத்துவ குணமிக்க பனங்கற்கண்டு பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. தற்போது உற்பத்தி குறைவுடன் தேவை அதிகரிப்பால் விலை அதிகரித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியில் முதல்தர பனங்கற்கண்டு கிலோ ரூ.1600க்கு விற்கப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடற்கரையோரம், அதை சுற்றியுள்ள கிராமங்களில் ஏராளமான பனை மரங்கள் உள்ளன. இயற்கை மருத்துவ குணமிக்க பதநீர், நுங்கு, கருப்பட்டி, பனங்கற்கண்டு, பனம்பழம் உற்பத்தி குறைவாகவுள்ள நிலையில் அவற்றுக்கான தேவையும் அதிகரித்துள்ளது. சாயல்குடி மற்றும் அதன் அருகேவுள்ள கன்னிகாபுரி, நரிப்பையூர், மூக்கையூர், கன்னிராஜபுரத்தில் பனங்கற்கண்டு உற்பத்தி செய்யப்படுகிறது.
உற்பத்தியாளர்கள் கூறியதாவது: கருப்பட்டியை போன்று பனங்கற்கண்டு இலகுவாக ஒரே நாளில் காய்ச்சி விட முடியாது. 110 டிகிரி கொதிநிலையில் பதநீரை நன்கு காய்ச்ச வேண்டும். 200 லிட்டர் பதநீரை காய்ச்சினால் 6 கிலோ பனங்கற்கண்டு கிடைக்கிறது.
நன்கு வட்டுக்களில் காய்ச்சப்பட்ட பதநீரை செவ்வக வடிவிலான டின்னில் குறுக்கும் நெடுக்குமாக நுால் சுற்றி வைக்க வேண்டும்.
அதனுள் வடிகட்டப்பட்ட சூடான கருப்பட்டி கூழை ஊற்ற வேண்டும். மண்ணில் புதைத்து ஆடாமல் அசையாமல் 50 நாட்கள் வைத்திருக்க வேண்டும். உரிய முறையில் பாதுகாக்கப்பட்ட டின்னை எடுத்து அவற்றில் நுால் கட்டப்பட்ட பனங்கற்கண்டை தனியாக பிரித்து நீரில் கழுவி உலர வைத்தால் முதல் தரமான பனங்கற்கண்டு கிடைக்கும்.
சாயல்குடி சுற்றியுள்ள பகுதியில் கடந்தாண்டு கிலோ ரூ.1400க்கு பனங்கற்கண்டு விற்றது. தேவை அதிகரித்துள்ளதால் முதல்தர பனங்கற்கண்டு கிலோ ரூ.1600 வரை கடைகளில் விற்கிறது. வெளிநாடுகள், வெளியூர்களுக்கு பனை ஓலை கொட்டான்களில் பேக்கிங் செய்த பனங்கற்கண்டுகளை வாங்கி செல்கின்றனர். அழிக்கப்படும் பனை மரங்களால் இத்தொழில் நசிவடைந்து வருகிறது. பனைவெல்ல கூட்டுறவு சங்க வாரியத்தினர் உரிய முறையில் தொழிலை ஊக்குவித்தால் கூடுதலாக பனங்கற்கண்டு உற்பத்தி செய்ய இயலும் என்றனர்.