ராமநாதபுரத்தில் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் நகரில் மதுரை ரோட்டில் போக்குவரத்து பணிமனை அருகில் துவங்கி எல்.ஐ.சி., அலுவலகம் வரை ரோட்டோரத்தில் பேவர்பிளாக் கற்கள் பதித்து நடைபாதை அமைத்துள்ளனர். அதுவும் ஒருபுறத்தில் மட்டுமே உள்ளது.
ராமநாதபுரம், பட்டணம்காத்தான், சக்கரக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை ரோடு, பஸ் ஸ்டாண்ட் ரோடு, ரயில்வே பீடர் ரோடு, பாரதிநகர், பட்டணம்காத்தான், சேதுபதி நகர், கலெக்டர் அலுவலகம் வரை மழைநீர் வரத்து கால்வாய்கள் சரிவர பராமரிக்கப்படாமல் புதர்மண்டியுள்ளது.
இதனால் சிறிய மழை பெய்தால் கூட மதுரை ரோடு, ராமேஸ்வரம் ரோட்டில் தண்ணீர் குளம் போல தேங்கிவிடுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் மதுரை ரோட்டில் விடுபட்டுள்ள பகுதிகள், ராமேஸ்வரம் ரோட்டில் இருபுறங்களில் பேவர் பிளாக் கற்கள் பதித்து நடைபாதை அமைக்கவும், மழைநீர் செல்லும் வாய்க்கால்களை துார்வாரி ஆழப்படுத்தி அவற்றை மூடுவதற்கு ரூ.20 கோடியில் திட்ட மதிப்பீடு தயார் செய்துள்ளனர்.
நிதி கிடைத்தவுடன் நடப்பாண்டில் இப்பணிகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

