ADDED : ஆக 02, 2025 11:21 PM

திருவாடானை: திருவாடானை அருகே ஓரியூரில் 2006 ல் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பொது கழிப்பறை கட்டப்பட்டது. இக் கழிப்பறை 15 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாடில்லாமல் உள்ளது. அனைத்து கதவுகளும் துருப்பிடித்தும், செடிகள் அடர்ந்து முட்புதராக மாறியுள்ளது. அப்பகுதியை சேர்ந்த அலெக்ஸ்பாண்டி, கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளுக்கு மனு அனுப்பினார்.
அவருக்கு பதில் கடிதம் அனுப்பப்பட்டது. அதில் வட்டார ஒருங்கிணைப்பாளர் மூலம் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என 2023ல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கழிப்பறையை திறக்கவில்லை. இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள் சமூக வலைதளங்களில் கழிப்பறையை திறக்க வலியுறுத்தி பேசியுள்ளனர். அதில் முதல்வர் அப்பா அவர்களே ஓரியூர் கழிப்பறையை திறக்க நடவடிக்கை எடுங்கள் என்று கூறியுள்ளனர்.