/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பெருமாள் கோயில்களில் புரட்டாசி சிறப்பு பூஜை
/
பெருமாள் கோயில்களில் புரட்டாசி சிறப்பு பூஜை
ADDED : செப் 22, 2024 04:00 AM

திருவாடானை, : திருவாடானை, தொண்டி, பரமக்குடியில் உள்ள பெருமாள் கோயில்களில் புரட்டாசி முதல் சனி வாரத்தையொட்டி பக்தர்கள் 'கோவிந்தா' கோஷம் முழங்க தரிசனம் செய்தனர்.
தொண்டி உந்திபூத்த பெருமாள், பாண்டுகுடி லட்சுமி நாராயண பெருமாள், ஆலம்பாடி கலியுகபெருமாள், குளத்துார் குலசேகர பெருமாள், திருவாடானை வரதாராஜ பெருமாள் மற்றும் கிராமங்களில் உள்ள பெருமாள் கோயில்களில் நேற்று புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
முன்னதாக நடந்த அபிேஷகத்தில் ஏராளமானபக்தர்கள் கலந்து கொண்டனர். பெருமாள் துளசி மாலை அலங்காரத்தில் காட்சியளித்தார்.
* பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் தாயார் சன்னதியில் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளினார். அப்போது சங்கு, சக்கரம், வில், வாள், கதை ஏந்தி பக்தர்களுக்கு அருளினார். மூலவர் பரம சுவாமி திருப்பதிக அலங்காரத்தில் இருந்தார். காலை 6:00 மணி முதல் பக்தர்கள் நீண்டவரிசையில் தரிசனம்செய்தனர். இரவு 9:30 மணிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில்மூலவர் வரதராஜன் திருப்பதி அலங்கார சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து நேற்று காலை நவ கலசங்களுடன் சிறப்பு ஹோமங்கள் நடந்தது. உற்ஸவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாளுக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து ராதா கிருஷ்ணன் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
பரமக்குடி அனுமார் கோதண்டராமசாமி கோயிலில் நேற்று காலை 10:00 மணிக்கு புனித புளி ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. ராமர் கருட வாகனத்தில் பரமபத நாதனாக அருள்பாலித்தார்.
*திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயில் வைணவ திவ்ய தேசங்களில் 44-வதாக திகழ்கிறது. இங்கு நேற்று புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு நடை அடைக்கும் நேரம் போக காலை முதல் இரவு 8:00 மணி வரை நீண்ட வரிசையில் பக்தர்கள் சுவாமி தரிசனம்செய்தனர்.
ஆதிஜெகநாத பெருமாள், பத்மாஸனி தாயார், பட்டாபிஷேக ராமர், ஆண்டாள்,தர்ப்பசயன ராமர் உள்ளிட்ட சன்னதிகளில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அரச மரத்தை சுற்றி வழிபாடு செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதமாக பொங்கல், புளியோதரை வழங்கப்பட்டது.
கீழக்கரை தட்டான் தோப்பு தெரு நாராயணசுவாமி கோயிலில் மூலவருக்கு 16 வகை அபிஷேகம் அலங்கார தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பெண்கள் நெய் விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.

