ADDED : ஜன 21, 2025 05:41 AM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் ரயில்வே ஸ்டேஷனில் பிளாட்பாரம் அமைக்கும் பணி மந்தமாக நடக்கிறது.
பாம்பன் கடலில் ரூ. 530 கோடியில் அமைத்த புதிய ரயில் பாலம் பணி 100 சதவீதம் முடிந்த நிலையில், திறப்பு விழாவுக்காக காத்திருக்கிறது.
மேலும் ராமேஸ்வரத்தில் ரூ.90 கோடியில் ரயில்வே ஸ்டேஷன் மறுசீரமைப்பு பணி நடக்கிறது. இங்கு பிரமாண்ட முகப்பு தோற்றம், பயணிகள் ஓய்வறை, வணிக வளாகம் உள்ளிட்ட கட்டடங்கள் கட்டும் பணி இந்தாண்டு இறுதி வரை நடக்கும் என ரயில்வே பொறியாளர்கள் தெரிவித்தனர்.
பாம்பன் ரயில் பாலம் திறந்ததும், ரயில் போக்குவரத்து துவங்கும். இதனால் ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷனில் 1 முதல் 4 வரை உள்ள பிளாட்பாரம், கூரைகளை புதுப்பித்து கழிப்பறை, குடிநீர் வசதி அமைத்திட ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டது.
ஆனால் பிளாட்பாரத்தில் கிரானைட் கற்கள், கூரை அமைக்காமலும், குடிநீர் குழாய், பயணிகளுக்கான இருக்கை வசதி ஏற்படுத்தாமல் அனைத்து பணியும் முடங்கி கிடக்கிறது. அடிப்படை வசதி கூட ஏற்படுத்தாத நிலையில், பயணிகள் வந்திறங்கினால் பெரிதும் அவதிப்படுவார்கள்.
எனவே ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷனில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திட ரயில்வே அமைச்சகம் உத்தரவிட வேண்டும்.