ADDED : ஏப் 04, 2025 06:32 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் நேற்று காலை மிதமான மழைபெய்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு மக்கள் குளிர்ந்த காற்றை அனுபவித்தனர். தாழ்வான இடங்களில் நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள், மக்கள் சிரமப்பட்டனர்.
ராமநாதபுரத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. வெப்ப சலனத்தால் மக்கள் சிரமப்பட்டனர். இந்நிலையில் ராமநாதபுரத்தில் நேற்று காலையில் மிதமான மழை பெய்தது. இதனால் பழைய பஸ் ஸ்டாண்ட் ரோடு, அரண்மனை சந்தை ரோடு பகுதிகளில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியதால் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், அலுவலகங்களுக்கு செல்ல மக்கள் சிரமப்பட்டனர்.
நடைபாதை, தள்ளுவண்டிகளில் வியாபாரம் பாதிக்கப்பட்டது. குறிப்பாக ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை நுழைவாயில், பழைய பஸ் ஸ்டாண்டில் தண்ணீர் தேங்கியதால் மக்கள் சிரமப்பட்டனர்.
*திருவாடானை, தொண்டி பகுதியில் பரவலாக பெய்த கோடை மழையால் வெப்பம் தணிந்தது. இப்பகுதியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. நேற்று முன்தினம் இரவு, நேற்று காலை, மாலையில் திடீரென கோடை மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். ரோடுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.