/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உத்தரகோசமங்கை கோவிலுக்குள் மழைநீர்
/
உத்தரகோசமங்கை கோவிலுக்குள் மழைநீர்
ADDED : நவ 21, 2024 01:40 AM

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோவிலில் அபூர்வ மரகத நடராஜர் சிலை உள்ளது.
இங்கு ஆண்டுதோறும் ஆருத்ரா தரிசன விழா கொண்டாடப்படுகிறது. பழமை வாய்ந்த இக்கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநில பக்தர்களும் வந்து செல்கின்றனர்.
இங்கு போதிய வடிகால் வசதியின்றி மழைநீர் தேங்குவது வாடிக்கையாகியுள்ளது. நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மாலை வரை தொடர்ந்து பலத்த மழை பெய்ததால், வெளியே சாலையில் தேங்கிய தண்ணீர் கோவில் உள் பிரகாரங்களில் புகுந்தது. இதனால் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய சிரமப்பட்டனர்.
பலத்த மழை
இதேபோல, ராமநாதபுரம் நகர், புறநகர் பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் குளம் போல தண்ணீர் தேங்கியது. நான்கு மரங்கள் சாய்ந்தன. ஆளில்லாத இரு பழைய ஓட்டு வீடுகள் சேதமடைந்தன. கனமழையால் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. சந்தை வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர்.
குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர்.
துாத்துக்குடி
துாத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை பரவலான மழை பெய்தது. தொடர்ந்து, இரவு வரை ஆங்காங்கே லேசான மழை பெய்ததால், இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டது. சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியதால் மக்கள் அவதியடைந்தனர்.
கனமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதிகபட்சமாக திருச்செந்துார், காயல்பட்டினம் பகுதியில் 45 மி.மீ., மழையும் பதிவாகியது. மாவட்டம் முழுதும் சராசரியாக 4.23 செ. மீ., மழை பதிவாகியது.
துாத்துக்குடி ராஜிவ் நகர் பகுதியில் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
துாத்துக்குடி அரசு மருத்துவமனை குழந்தைகள் பிரிவு மற்றும் ரத்த வங்கி பகுதியின் முன் மழை நீர் தேங்கியுள்ளதால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர். காமராஜர் காய்கறி மார்க்கெட்டிற்குள் தண்ணீர் புகுந்ததால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர்.
ராமநாதபுரத்திற்கு 'ரெட் அலெர்ட்'
ராமநாதபுரம் மாவட்டத்தில், நேற்று முன்தினம் இரவு முதல் மாலை 4:00 மணி வரை இடைவிடாது மழை பெய்தது.
இதையடுத்து, ஒரே நாளில் மாவட்டம் முழுதும் 164.18 செ.மீ., மழை பதிவானது. அதிகபட்சமாக ராமேஸ்வரத்தில் 41.1 செ.மீ., பெய்தது.
ராமநாதபுரத்தில் இன்று அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், 'ரெட் அலெர்ட்' எச்சரிக்கை விடுத்துள்ளது.