/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரம், கீழக்கரை கண்மாய்களில் விவசாயத்திற்கு.. மண் எடுக்க முடியல : அரசு உத்தரவிட்டும் அனுமதிக்க அதிகாரிகள் இழுத்தடிப்பு
/
ராமநாதபுரம், கீழக்கரை கண்மாய்களில் விவசாயத்திற்கு.. மண் எடுக்க முடியல : அரசு உத்தரவிட்டும் அனுமதிக்க அதிகாரிகள் இழுத்தடிப்பு
ராமநாதபுரம், கீழக்கரை கண்மாய்களில் விவசாயத்திற்கு.. மண் எடுக்க முடியல : அரசு உத்தரவிட்டும் அனுமதிக்க அதிகாரிகள் இழுத்தடிப்பு
ராமநாதபுரம், கீழக்கரை கண்மாய்களில் விவசாயத்திற்கு.. மண் எடுக்க முடியல : அரசு உத்தரவிட்டும் அனுமதிக்க அதிகாரிகள் இழுத்தடிப்பு
ADDED : ஆக 12, 2025 11:12 PM

ராமநாதபுரம்: கண்மாய்கள், ஊருணிகளில் விவசாயப் பணி, மண்பாண்ட தொழிலுக்கு தேவையான வண்டல், களிமண் எடுப்பதற்கு ஜூலை மாதம் அரசு அனுமதி வழங்கியுள்ளது. இருந்தும் ராமநாதபுரம், கீழக்கரை தாலுகாவில் மண் எடுக்க அனுமதி வழங்காமல் அதிகாரிகள் இழுத்தடிப்பதாக விவசாயிகள் புலம்புகின்றனர்.
விவசாய பயன்பாட்டிற்கு நன்செய் நிலத்தில் ஏக்கருக்கு 75 க.மீ., மிகாமலும், புன்செய் நிலத்தில் ஏக்கருக்கு 90 க.மீ., மிகாமலும், வண்டல் மண் எடுக்க இரு ஆண்டிற்கு ஒரு முறை அனுமதி வழங்கவும், மண்பாண்ட தொழில் செய்பவர்களுக்கு 60 க.மீ.,க்கு மிகாமல் களிமண் எடுத்துக்கொள்ள தாசில்தார் அனுமதி வழங்க வழிவகை செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் வண்டல், களிமண் எடுப்பதற்கு தகுதியான 1305 கண்மாய், ஊருணிகளுக்கான விபரப் பட்டியல் மாவட்ட அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளன. இதையடுத்து விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்கள் தங்களுக்கு தேவையான வண்டல், களிமண் எடுக்க தங்கள் தாலுகாவிற்கு உட்பட்ட கண்மாய், ஊருணிகளுக்கான விபரங்களுடன் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து வருகின்றனர். இருப்பினும் ராமநாதபுரம், கீழக்கரை தாலுகாவில் மட்டும் அரசியல் தலையீடு காரணமாக இதுவரை மண் எடுக்க அனுமதி வழங்கவில்லை என விவசாயிகள் புகார் கூறுகின்றனர்.
மாலங்குடியை சேர்ந்த கீழக்கரை தாலுகா அனைத்து விவசாயிகள் சங்கம் செயலாளர் கனக விஜயன் கூறுகையில், தாலுகா அலுவலகத்தில் விவசாயத்திற்காக மண் எடுக்க அனுமதிகோரி விண்ணப்பித்தும் அனுமதி தராமல் அதிகாரிகள் இழுத்தடிக்கின்றனர். குறிப்பாக கீழக்கரை, ராமநாதபுரத்தில் இதுவரை அனுமதி வழங்காமல் இழுத்தடிக்கின்றனர். இவ்விஷயத்தில் கலெக்டர் தலையிட்டு மழைகாலத்திற்குள் உடனடியாக அனுமதி வழங்க உத்தவிட வேண்டும் என்றார்.
ராமநாதபுரம் தாசில்தார் ரவி கூறுகையில், கண்மாய், ஊருணிகளில் மண் எடுக்க 8 பேர் விண்ணப்பித்துள்ளனர். விவசாயிகள் அல்லாத வியாபாரிகளும் மண் அள்ள குறுக்கு வழியில் முயற்சி செய்கின்றனர். அவர்களை கண்டறிந்து தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு மட்டும் ஓரிரு நாட்களில் கலெக்டர் உத்தரவில் மண் எடுக்க அனுமதி வழங்க உள்ளோம் என்றார்.
இது தொடர்பாக விளக்கம் கேட்க கீழக்கரை தாசில்தார் முகமது ஜமாலுதீனை அலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்ற போது அவரது எண் பிசியாகவே இருந்தது.-------