/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வெளி மாநிலங்களுக்கு செல்லும் ராமநாதபுரம் கோரைக்கிழங்கு
/
வெளி மாநிலங்களுக்கு செல்லும் ராமநாதபுரம் கோரைக்கிழங்கு
வெளி மாநிலங்களுக்கு செல்லும் ராமநாதபுரம் கோரைக்கிழங்கு
வெளி மாநிலங்களுக்கு செல்லும் ராமநாதபுரம் கோரைக்கிழங்கு
ADDED : பிப் 12, 2025 06:18 AM

ஆர்.எஸ்.மங்கலம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் விளையும் கோரைக்கிழங்கு மருத்துவ பயன்பாட்டிற்காக வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன.
இந்திய மருத்துவத்தில் தவிர்க்கவே முடியாத தாவரம் தான் கோரைக்கிழங்கு. இது புல்வகையைச் சேர்ந்த சிறு செடியாகும். இந்தச் செடியின் வேர் கிழங்குகள் தான் கோரைக்கிழங்கு என்றழைக்கப்படுகிறது. கசப்பு சுவை உடையது.
இந்தப் கோரைக்கிழங்கில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளதால் ஆங்கிலம் மற்றும் நாட்டு மருத்துவத்தில் இந்த கோரைக்கிழங்கு முக்கிய பங்காற்றி வருகிறது. குழந்தைகளுக்கு வயிற்று வலி, நாள்பட்ட வயிற்றுப்போக்கு, குடல் புழுக்கள் வெளியேற்றம், தாய்ப்பால் சுரப்பு அதிகரிப்பு, சரும பாதுகாப்பு, முகச்சுருக்கம் மற்றும் கர்ப்பப்பை புண்கள் உள்ளிட்ட பல்வேறு நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் கோரைக் கிழங்கிற்கு உள்ளது.
இதனால் இதன் தேவையும் வெளி மாநிலங்களில் அதிகரித்துள்ளது. குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் விளையும் கோரைக்கிழங்குகள், அதிக உறுதித் தன்மை மற்றும் பொடி அதிகம் கிடைப்பதாலும், மருத்துவ பயன்பாடு தவிர்த்து பல்வேறு மூலப்பொருட்கள் உற்பத்திக்கும் இது பயன்படுகிறது.
இதனால் இந்த கிழங்குகளுக்கு வெளி மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்டவைகளில் மவுசு அதிகம். இதனால் மாவட்டத்தில் தரிசு நிலங்களில் விளையும் இந்த கோரை கிழங்குகளை தொழிலாளர்கள் உழவு செய்து கூலி ஆட்கள் மூலம் கிழங்குகளை சேகரித்து மொத்தமாக விற்பனை செய்யும் பணியில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த கிழங்கு சேகரிப்பில் நல்ல வருவாய் கிடைப்பதால் ஆர்.எஸ்.மங்கலம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிலாளர்கள் முகாமிட்டு கோரைக்கிழங்கு சேகரிப்பில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.

