/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பராமரிப்பின்றி ராமநாதபுரம் ஊருணிகள்: நிரம்புவதில் சிக்கல்: மழைநீரால் குளமாகும் காலி பிளாட்டுகள்
/
பராமரிப்பின்றி ராமநாதபுரம் ஊருணிகள்: நிரம்புவதில் சிக்கல்: மழைநீரால் குளமாகும் காலி பிளாட்டுகள்
பராமரிப்பின்றி ராமநாதபுரம் ஊருணிகள்: நிரம்புவதில் சிக்கல்: மழைநீரால் குளமாகும் காலி பிளாட்டுகள்
பராமரிப்பின்றி ராமநாதபுரம் ஊருணிகள்: நிரம்புவதில் சிக்கல்: மழைநீரால் குளமாகும் காலி பிளாட்டுகள்
ADDED : அக் 31, 2024 01:17 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகர், புறநகர் பகுதிகளில் மழைநீரை சேகரிக்கும் வகையில் நிலத்தடி நீர்மட்டத்திற்கு ஆதாரமாக உள்ள ஊருணிகள் துார்வாரப்படாமலும், நீர்வரத்து வாய்க்கால் பராமரிப்பு இல்லாத காரணத்தால் மழை நீரை முழுமையாக சேமிக்க முடியவில்லை.மாறாக அருகில் உள்ள காலி பிளாட்டுகளில் குளம் போல தண்ணீர் தேங்கியுள்ளது.
ராமநாதபுரம் நகராட்சி மற்றும் அருகில் உள்ள சக்கரகோட்டை, பட்டணம்காத்தான் ஊராட்சியில் ஊருணிகள் பல உள்ளன. ஒரு காலத்தில் இவற்றில் தேங்கும் தண்ணீரில் மக்கள் குளிக்க, துவைக்க பயன்படுத்தினர். நிலத்தடி நீர்மட்டத்திற்கு ஆதாரமாகவும் உள்ளன.
இந்நிலையில் பல ஆண்டுகளாக குளங்கள், ஊருணிகள் பராமரிக்கப்படாமல் அப்படியே விட்டுள்ளனர். இதனால் படித்துறை சேதமடைந்தும், குப்பை கொட்டும் இடமாகியும் உள்ளன. தண்ணீரை உறிஞ்சும் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து மழைநீரை முழுமையாக சேகரிக்க முடியாத நிலை உள்ளது.
குறிப்பாக மழைநீர் செல்லும் வரத்து கால்வாய்கள் பராமரிக்கப்படாமல் மண் மேவியும், முட்செடிகள் வளர்ந்துள்ளன. சக்கரக்கோட்டை, பட்டணம்காத்தான் ஊராட்சிகளில் மழைநீரை வெளியேற்றுவதற்கான வாறுகால்கள் சீரமைக்கப்படாமல் உள்ளதால் குடியிருப்பு பகுதிகளில் உள்ள காலி பிளாட்டுகளில் கழிவு நீருடன் மழைநீரும் சேர்ந்து குளம் போல மாறியுள்ளது.
குறிப்பாக கலெக்டர் அலுவலகம் அருகே ஆயுதப்படை மைதானம் அருகே காலி இடத்தில் கழிவுநீரை கொட்டுகின்றனர். அத்துடன் தற்போது மழை நீரும் கலந்து துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் உற்பத்தி மையமாகியுள்ளது. எனவே காலி பிளாட்டுகளில் தேங்கியுள்ள கழிவுநீரை வெளியேற்றவும், வாறுகால்களை செப்பனிட்டு மழைநீரை ஊருணிகளில் சேமிக்கவும் நகராட்சி, ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும்.