/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பெண்ணிடம் நகை மோசடி ராமநாதபுரம் வாலிபர் கைது
/
பெண்ணிடம் நகை மோசடி ராமநாதபுரம் வாலிபர் கைது
ADDED : ஆக 15, 2025 11:27 PM

மூணாறு,:இடுக்கியில் மறு மணத்திற்கு இணைய வழி 'மேட்ரிமோனியல்' மூலம் வரன்தேடிய பெண்ணிடம் ஐந்து பவுன் போலி நகையை கொடுத்து இரண்டு பவுன் தங்க நகையுடன் ' எஸ்கேப்' ஆன ராமநாதபுரத்தை சேர்ந்த கார்த்திக்ராஜ் 30,என்ற மோசடி மன்னனை போலீசார் கைது செய்தனர்.
இடுக்கிமாவட்டம் வாகமண்ணைச் சேர்ந்த பெண் ஒருவர் தமிழ் இணைய வழி ' மேட்ரிமோனியல்' மூலம் மறுமணத்திற்கு வரன் தேடினார். அப்போது ராமநாதபுரத்தைச் சேர்ந்த கார்த்திக்ராஜ், அபிலாஷ் டாக்டர் என்ற பெயரில் அறிமுகம் ஆனார்.
அதனை நம்பி அவரிடம் அலைபேசி மூலம் பழகினார். இருவரும் இடுக்கி மாவட்டம் தொடுபுழாவில் ஆக.5ல் சந்தித்து பரஸ்பரமாக பேசி மகிழ்ந்தனர். அப்போது தன்னிடம் இருந்த ஐந்து பவுன் தங்க செயினை சம்பந்தப்பட்ட பெண்ணிடம் கொடுத்த கார்த்திக்ராஜ், அவர் அணிந்திருந்த செயினில் டாலரை மாட்டி தருவதாக கூறி இரண்டு பவுன் தங்க செயினை வாங்கி கொண்டார்.
அதன்பிறகு ஓட்டலில் உணவு உண்ட இருவரும் ஜவுளி கடைக்கு சென்று புதிய துணிகளை வாங்கிய நிலையில் பெண், அதனை அணிந்து பார்க்கஅறைக்குள் சென்றார். அந்த இடைவெளியில் கார்த்திக்ராஜ் இரண்டு பவுன் தங்க செயினுடன் ' எஸ்கேப்' ஆனார்.
கார்த்திக்ராஜ் கொடுத்த செயினை பின்னர் பரிசோதித்த போது போலி நகை என தெரியவந்தது.
தொடுபுழா போலீசில் அப்பெண் புகார் அளித்தார். எஸ்.ஐ., அஜீஷ் கே. ஜான் தலைமையில் தனிப்படை போலீசார்ஈரோட்டில் பதுங்கி இருந்த கார்த்திக்ராஜை கைது செய்தனர்.
இவர், இதே பாணியில் தமிழகத்தில் ஆறு பேரிடம் மோசடி செய்ததாகவும், தன்னை வங்கி அதிகாரி எனக் கூறி ஏமாற்றி ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாவும் விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் கூறினர்.