ADDED : செப் 25, 2025 03:17 AM
ராமேஸ்வரம்: புரட்டாசி விரதம் துவங்கியதால் மீன்கள் விலை வீழ்ச்சி அடைந்ததால் நேற்று முதல் பாம்பனை தொடர்ந்து ராமேஸ்வரம் மீனவர்களும் மீன்பிடிக்க செல்லாமல் ஓய்வெடுத்தனர்.
செப்., 22 முதல் நவராத்திரி விழா துவங்கியதால் நாடு முழுவதும் ஹிந்துக்கள் விரதம் இருக்கின்றனர். இதனால் சைவ உணவுக்கு மாறியதால் கோவை, கேரளா உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள மார்க்கெட்டில் மீனுக்கு மவுசு குறைந்தது. இதனால் கிலோ மீனுக்கு ரூ. 50 முதல் 120 வரை விலை குறைந்தது.
இச்சூழலில் மீன்பிடிக்க சென்றால் நஷ்டம் ஏற்படும் என்பதால் நேற்று முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் நவராத்திரி விழா முடிந்த பின் மீன்பிடிக்கச் செல்ல முடிவு செய்தனர்.
இதனால் 500 படகுகளை கரையில் நிறுத்தி வைத்து வீடுகளில் முடங்கினர். ஆனால் மீதமுள்ள சிறிய ரக 100 விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல உள்ளனர். இப்படகில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் இறால், நண்டு, கணவாய் மீன்கள் சிக்கும். தமிழக மார்க்கெட்டில் விற்ககூடிய மீன்கள் அதிகமாக சிக்க வாய்ப்பு இல்லை.