/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இல்லாத பஸ்சுக்கு முன்பதிவு ராமேஸ்வரம் பயணியர் அவதி
/
இல்லாத பஸ்சுக்கு முன்பதிவு ராமேஸ்வரம் பயணியர் அவதி
இல்லாத பஸ்சுக்கு முன்பதிவு ராமேஸ்வரம் பயணியர் அவதி
இல்லாத பஸ்சுக்கு முன்பதிவு ராமேஸ்வரம் பயணியர் அவதி
ADDED : ஆக 09, 2025 09:24 PM
ராமேஸ்வரம்:ராமேஸ்வரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு, இல்லாத அரசு பஸ்சுக்கு முன்பதிவு செய்ததால், கேரள பயணியர் இரண்டரை மணி நேரம் அவதிப்பட்டனர்.
கேரளா, ஆலப்புழாவை சேர்ந்தவர் ஸ்ரீஜித், 51. உறவினர்கள், 15 பேருடன் நேற்று முன்தினம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் தரிசனம் செய்துள்ளார்.
ராமேஸ்வரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு அரசு பஸ்சில் ஆன்லைனில் முன்பதிவு செய்து, அதற்கான கட்டணமும் செலுத்தியுள்ளார். காலை, 7:15க்கு புறப்படும் இந்த பஸ்சில் செல்ல, ஸ்ரீஜித், குடும்பத்தினருடன் பஸ் ஸ்டாண்ட் வந்தார்.
பஸ் வராததால், அங்கிருந்த ஊழியரிடம் விசாரித்தபோது, காலை, 6:00 மணிக்கு பின், 9:45 மணிக்கு தான் பஸ் உள்ளது என, கூறினர். அதிர்ச்சியடைந்த கேரள பயணியர், ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ., தலைவர் முரளிதரனிடம் நடந்த சம்பவத்தை கூறினர்.
பின், போக்குவரத்து உயர் அதிகாரியிடம் புகார் செய்த நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு முன்பே, காலை, 7:15க்கு கன்னியாகுமரி செல்லும் பஸ் ரத்து செய்யப்பட்டது தெரிய வந்தது.
ஆனால், ஆன்லைனில் முடக்காததால், முன்பதிவு ஆகியுள்ளது எனவும், அதற்கு பதிலாக, காலை, 9:45 மணிக்கு புறப்படும் பஸ்சில் செல்லலாம் என, அதிகாரிகள் மழுப்பலாக தெரிவித்தனர்.
முரளிதரன் கூறுகையில், ''இல்லாத பஸ்சிற்கு முன்பதிவு செய்து பணம் வசூலித்தது, தமிழக அரசின் நிர்வாக சீர்கேட்டை காட்டுகிறது. பாதிக்கப்பட்ட கேரள பயணியரிடம் தமிழக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்,'' என்றார்.