/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராணி சேதுராஜபுரத்தில் நடமாட முடியவில்லை
/
ராணி சேதுராஜபுரத்தில் நடமாட முடியவில்லை
ADDED : ஜன 23, 2025 04:01 AM
பெருநாழி: பெருநாழி அருகே பாப்பிரெட்டியாபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ராணி சேதுராஜபுரத்தில் தெருக்கள் முழுவதும் சேறும் சகதியுமாக இருப்பதால் கிராம மக்கள் நடமாட முடியவில்லை.
கிராமத்தில் 500 குடும்பத்தினர் வசிக்கின்றனர். கிராமத்திற்கு தேவையான ரோடு வசதி இதுவரை அமைக்கப்படாததால் மண்மேவி காணப்படுகிறது. வெயில் நேரத்தில் புழுதி, மழை பெய்தால் சகதிக்காடாகும் நிலை உள்ளது. வீடுகளில் இருந்து வெளியேறக்கூடிய கழிவு நீரை கடத்துவதற்கான வாறுகால்வாய் வசதி அமைக்கப்படவில்லை.
எல்லா காலங்களிலும் தெருக்களில் கழிவுநீர் வழிந்து ஓடுவதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பகலிலும், இரவிலும் கொசுப் பண்ணைகள் உருவாகி பொதுமக்களை கடிக்கிறது. ஏராளமானோர் காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். ராணி சேதுராஜபுரம் கிராம மக்கள் கூறியதாவது:
கமுதி ஒன்றியத்திற்கு உட்பட்ட இக்கிராமத்தில் எவ்வித அடிப்படை வசதியும் இன்றி பல ஆண்டுகளாக உள்ளோம். ஊராட்சி நிர்வாகம் சார்பில் முறையான வாறுகால்வாய் வசதி அமைத்து தரவில்லை. தெருவிளக்குகள் முறையாக எரியவில்லை.
இரவு நேரங்களில் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகளவு உள்ளது. எனவே ஊராட்சி தனி அலுவலர்கள் கிராம மக்களின் நலன் கருதி மண் சாலையை பேவர் பிளாக் சாலையாக மாற்ற வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

