ADDED : ஜூலை 16, 2025 11:21 PM
திருவாடானை:தொண்டி கிழக்கு கடற்கரை சாலையில் இருந்த கொடி கம்பங்கள் தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக அகற்றப்பட்டது.
தேசிய, மாநில நெடுஞ்சாலைத்துறைகள், உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்ட பொது இடங்களில் நிறுவப்பட்டுள்ள அரசியல்கட்சிகளின் கொடிக் கம்பங்கள் ஏப்.,21க்குள் அகற்றப்பட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து திருவாடானை, தொண்டி பகுதியில் கொடி கம்பங்கள் அகற்றும் பணி நடந்தது.
ஆனால் கிழக்கு கடற்கரை சாலையில் தொண்டி அருகே நம்புதாளையில் கொடிக் கம்பங்கள் அகற்றப்படாமல் இருந்தது. நீதிமன்றம் உத்தரவிட்டும் கொடி கம்பங்கள் அகற்றப்படாமல் இருப்பதால் போக்குவரத்து பாதிக்கப்படுவதோடு தேவையற்ற பிரச்னை ஏற்படுவதாகவும், கொடி கம்பங்கள் அகற்றப்படாமல் இருப்பது கோர்ட்டு உத்தரவை மீறுவதாக உள்ளதாக அப்பகுதி சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
இது குறித்த செய்தி தினமலர் நாளிதழில் நேற்று படத்துடன் வெளியானது. அதனை தொடர்ந்து நேற்று வருவாய்த்துறை அலுவலர்கள் சென்று கொடிக் கம்பங்களை அகற்றினர்.