/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பெருமாள் கோயிலில் சீரமைக்கும் பணிகள்
/
பெருமாள் கோயிலில் சீரமைக்கும் பணிகள்
ADDED : ஜன 05, 2025 05:37 AM

தொண்டி : தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக தொண்டி உந்திபூத்த பெருமாள் கோயிலில் சேதமடைந்த சுற்றுச்சுவரை சீரமைக்கும் பணிகள் நடக்கிறது.
தொண்டியில் மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த ஹிந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான உந்திபூத்த பெருமாள் கோயில் உள்ளது.
ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் இங்கு அருள்பாலிக்கிறார். ராமானுஜர் வழிபட்ட தலம்.
இங்கு கருடர், ஆஞ்சநேயர், கிருஷ்ணர், ஆதிேஷசன், ராமானுஜர் சன்னதிகள் உள்ளன. புரட்டாசி மாதத்தில் ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள். இக்கோயில் சுற்றுச்சுவர் செங்கல், மண்ணால் கட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவ.4ல் பலத்த மழைக்கு கோயில் வடக்கு பகுதியில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.
ஓராண்டாகியும் சுவரை சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இக்கோயிலுக்கு நிலம் மற்றும் கடை வாடகை மூலம் ஆண்டுக்கு ரூ.20 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ளது.
ஹிந்து சமய அறநிலையத்துறையினர் வருவாயை மட்டும் எதிர்பார்க்கின்றனர். ஆனால் கோயிலை சீரமைக்க தயக்கம் காட்டுவது ஏன் என்று பக்தர்கள் கேள்வி எழுப்பினர்.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக கடந்த மாதம் ராமநாதபுரம் ஹிந்து சமய அறநிலையத்துறை உதவிபொறியாளர் சங்கிலி, காரைக்குடி முத்துமாரியம்மன் கோயில் செயல் அலுவலர் விஸ்வநாத், ஹிந்து அறநிலையத்துறை ஆய்வாளர் சண்முகசுந்தரம் மற்றும் அலுவலர்கள் ஆய்வு செய்து சீரமைக்க பரிந்துரை செய்தனர்.
அதனை தொடர்ந்து கடந்த 10 நாட்களாக சுவரை சீரமைக்கும் பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.