
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலின் உபகோயிலான இரட்டைதாழை முனீஸ்வரர் கோயில் தனுஷ்கோடி செல்லும் தேசிய நெடுஞ்சாலை வடக்கு பகுதியில் உள்ளது.
300 ஆண்டுகள் பழமையான இக்கோயிலின் இருபுறமும் அடர்ந்த தாழம்பூ செடிகள் உள்ளதால் இரட்டை தாழை முனீஸ்வரர் கோயில் என பெயரிட்டனர். 30 ஏக்கரில் இக்கோயில் தனுஷ்கோடி மீனவர்களின் குலதெய்வமாக உள்ளது.
மேலும் வேண்டுதல் நிறைவேறியதால் உள்ளூர் மக்கள் பலரும் கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தி தரிசிக்கின்றனர். சாலை வசதி இல்லாத அக்காலத்தில் பாத யாத்திரை பக்தர்கள், தனுஷ்கோடி கடலில் புனித நீராடி விட்டு ராமேஸ்வரம் கோயிலில் நீராடி தரிசிப்பார்கள்.
அச்சமயத்தில் அடர்ந்த காட்டுக்குள் பக்தர்கள் செல்லும் போது திருடர்கள், மிருகங்களிடம் இருந்து பாதுகாத்திட இரட்டை தாழை முனீஸ்வரரை கும்பிட்டு செல்வது வழக்கம்.
இக்கோயில் ஓட்டு கட்டடம் சேதமடைந்ததால் ரூ.20 லட்சத்தில் திருப்பணிகள் செய்ய 2021ல் ஹிந்து சமய அறநிலையத்துறை பாலாலயம் பூஜை செய்தனர். ஆனால் 2016ல் இப்பகுதியில் பல நுாறு ஏக்கரை காப்புக்காடு என தமிழக வனத்துறை அறிவித்து கோயிலுக்கு சொந்தமான 30 ஏக்கரையும் வசமாக்கியது. இதனால் திருப்பணி துவக்கிட வனத்துறை முட்டுக்கட்டை போட்டதால் 4 ஆண்டுகளாக திருப்பணிகள் நடக்காமல் முடங்கி கிடப்பதால் பக்தர்கள் வேதனை அடைகின்றனர்.
வனத்துறை அதிகாரப்பூர்வ நோட்டீஸ் வழங்காமல் கோயில் நிலத்தை கையகப்படுத்தியது தொடர்பாக வனத்துறை உயர் அதிகாரிகளிடம் பேச்சு நடத்தி விரைவில் திருப்பணிகள் துவக்கப்படும் என ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழக வி.எச்.பி., ராமநாதபுரம் மண்டல அமைப்பாளர் ஆ.சரவணன் கூறுகையில், ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அலட்சியத்தால் 2016ல் முனீஸ்வரர் கோயிலை வனத்துறை கபளீகரம் செய்தது. தற்போது பராமரிப்பின்றி முனீஸ்வரர் சாமி ஒரு கொட்டகையில் உள்ளது.
இங்கு தினமும் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் மனக்குமுறலுடன் திரும்புகின்றனர். இக்கோயில் புனிதத்தை தமிழக அரசு சீரழித்து விட்டது. விரைவில் திருப்பணியை துவக்காவிடில் போராட்டம் நடத்துவோம் என்றார்.

