/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
துாய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் கோரிக்கை
/
துாய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் கோரிக்கை
ADDED : மே 03, 2025 05:14 AM
திருவாடானை: ஊராட்சி, பேரூராட்சிகளில் பணியாற்றும் துாய்மைப் பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் 47 ஊராட்சிகள், தொண்டி பேரூராட்சி உள்ளது. சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள துாய்மை இந்தியா திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கிராமங்களில் குடியிருப்புகள் பல மடங்கு அதிகரித்தும், அதற்கேற்ப துாய்மை பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை.
காலியிடங்களில் கிடக்கும் உடைந்த மதுபாட்டில்கள், கண்ணாடித்துகள்களை சேகரிக்கும் போது பணியாளர்கள் காயமடைகின்றனர். சாக்கடைகளை துார்வாரும் போது கையுறை உள்ளிட்ட எந்த உபகரணங்களும் இல்லாமல் வெறும் கையில் பணிகளை மேற்கொள்கின்றனர். இதனால் பணியாளர்கள் காயமடைவதுடன், நோய் தாக்குதலுக்கும் ஆளாகும் நிலை உள்ளது.
இது குறித்து துாய்மை பணியாளர்கள் கூறியதாவது: தாலுகாவில் 300க்கும் மேற்பட்ட துாய்மைப் பணியாளர்கள் வேலை செய்கிறோம். இரண்டு ஆண்டுக்கு முன்பு துாய்மை பணியாளர்களுக்கு சிறப்பு முகாம் நடத்தபட்டு சர்க்கரை, ரத்த அழுத்தம், உயரம், எடை, இதயநோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதா உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டது.
மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது. மேல் சிகிச்சைக்கான பரிந்துரைகளும் செய்யப்பட்டது. மருத்துவ காப்பீட்டு அட்டையும் வழங்கப்பட்டது. அதன் பிறகு முகாம் இதுவரை நடைபெறவில்லை. ஊராட்சி மற்றும் தொண்டி பேரூராட்சியில் சிறப்பு முகாம் நடத்த சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்றனர்.