/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மான்கள் சரணலாயம் அமைக்க கோரிக்கை
/
மான்கள் சரணலாயம் அமைக்க கோரிக்கை
ADDED : ஜூன் 30, 2025 04:12 AM

திருவாடானை : திருவாடானை தாலுகாவில் உள்ள கண்மாய்களில் மான், மயில்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் வனப்பகுதியில் சரணலாயம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
திருவாடானை தாலுகாவில் திருவாடானை, அஞ்சுகோட்டை, மங்களக்குடி, சிறுகம்பையூர், சிறுமலைக்கோட்டை, கட்டிவயல், நகரிகாத்தான் உள்ளிட்ட பெரும்பாலான கண்மாய்களில் மான்கள், மயில்கள் அதிகளவில் வாழ்கின்றன. பண்டைய காலத்தில் மிகவும் அபூர்வமாக காணப்பட்டவை தற்போது குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையும் வகையில் எண்ணிக்கை பெருகியுள்ளது.
தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக்குள் வரும் போது நாய்கள் கடித்தும், வாகனங்களில் அடிபட்டும் இறக்கின்றன. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
கண்மாய்களில் புள்ளி மான்கள் அதிகமாக வசிக்கின்றன. சில மாதங்களாக மான், மயில்கள் இறப்பு அதிகரித்து வருகிறது. சில கண்மாய்களில் சமூக விரோதிகளால் வேட்டையாடப்படுகின்றன. இதை தடுக்க வனத்துறையில் போதிய பணியாளர்கள் இல்லை.
இத் தாலுகாவில் பல ஆயிரம் ஏக்கர் வனப்பகுதியை தேர்ந்தெடுத்து அந்த இடத்தில் சரணலாயம் அமைத்தால் மான், மயில்கள் உயிரிழப்பை தடுப்பதற்கு வாய்ப்பாக அமையும் என்றனர்.