/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தொண்டி 5 வது வார்டுக்கு தேர்தல் நடத்த கோரிக்கை
/
தொண்டி 5 வது வார்டுக்கு தேர்தல் நடத்த கோரிக்கை
ADDED : பிப் 07, 2025 05:21 AM
தொண்டி : தொண்டி பேரூராட்சி 5 வது வார்டு கவுன்சிலர் இறந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் தேர்தல் நடத்தாததால் அத்தியாவசியப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
தொண்டி பேரூராட்சி ஐந்தாவது வார்டு கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தொண்டிஸ்வரன். இவர் 2023 மே மாதம் இறந்தார். அந்த வார்டுக்கான இடைத்தேர்தல் இதுவரை அறிவிக்கவில்லை. வார்டு தேர்தல் எப்போது நடக்கும் என மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
அதே வார்டை சேர்ந்த மாலிக் கூறியதாவது: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பதவி விலகினால் அல்லது இறந்தால் இடைத்தேர்தல் ஆறு மாதத்திற்குள் நடத்த வேண்டும். ஆனால் தொண்டி பேரூராட்சி ஐந்தாவது வார்டு கவுன்சிலர் பணியிடம் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ளது. இதனால் இந்த வார்டில் அத்தியாவசிய பணிகளை பேரூராட்சி நிர்வாகத்திற்கு கொண்டு செல்லாததால் குடிநீர் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெறாமல் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பொதுமக்களின் தேவைகளை அறிந்து பேரூராட்சியில் வலியுறுத்தி அடிப்படை வசதிகளை செய்வது வார்டு கவுன்சிலர்களின் முக்கிய கடமையாக உள்ளது. ஆகவே இந்த வார்டுக்கான தேர்தலை விரைவில் நடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

