ADDED : செப் 23, 2026 03:52 PM
திருவாடானை: திருவாடானையில் கோ–ஆப்டெக்ஸ் நிறுவனத்தை வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திறக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர். திருவாடானை தாலுகா தலைநகரமாக விளங்குகிறது. இங்கு அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லுாரிகள் செயல்பட்டு வருகின்றன. திருவாடானையை சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பல ஆயிரம் மக்கள் அன்றாடம் வந்து செல்கின்றனர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மக்கள் நெசவாளர்களின் கைத்தறி ஆடைகளை நம்பி வாங்குவார்கள்.
தீபாவளி, பொங்கல் போன்ற முக்கிய பண்டிகை காலங்களில் அரசு ஊழியர்களுக்கு சுலபமான தவணை முறையில் ஆடைகள் கோ–ஆப்டெக்ஸ் நிறுவனம் மூலம் வழங்கப்படும். இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
பண்டிகை காலங்களில் அரசு வழங்கும் தள்ளுபடி விலையில் தரமான கைத்தறி துணிகளை வாங்க முடியவில்லை. இப்பகுதி மக்கள் தேவகோட்டை, காரைக்குடி அல்லது ராமநாதபுரம் போன்ற நீண்ட துார நகரங்களுக்கு செல்கின்றனர். இதனால் கூடுதல் செலவும், நேர விரயமும் ஏற்படுகிறது. ஏழை மக்கள் மற்றும் அரசு பணியாளர்களுக்கு குறைந்த விலையில் தரமான கைத்தறி ஆடைகள் கிடைக்க கோ–ஆப்டெக்ஸ் உதவியாக இருக்கும்.
தீபாவளி நெருங்குவதால் ஏழை மக்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ கோ–ஆப்டெக்ஸ் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
––
