சிக்கலில் ரோட்டோரங்களில் ஆக்கிரமிப்புகளால் பாதிப்பு
சிக்கலில் ரோட்டோரங்களில் ஆக்கிரமிப்புகளால் பாதிப்பு
ADDED : ஏப் 12, 2026 03:58 PM
சிக்கல்: சிக்கல் கிழக்கு கடற்கரை சாலையின் பிரதான பகுதிகளில் ரோட்டோர ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. குறிப்பாக தங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை காட்டிலும் 10 முதல் 15 அடி நீளத்திற்கு ஆக்கிரமித்து கடைகள் மற்றும் முகப்பு பகுதிகளை நீட்டித்து வைத்துள்ளனர்.
ராமேஸ்வரம், நாகப்பட்டினம், கன்னியாகுமரி, திருச்செந்துார், சாயல்குடி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு செல்லக்கூடிய பிரதான சாலையாக சிக்கல் கிழக்கு கடற்கரை சாலை உள்ளது. இங்கு காலை மற்றும் மாலை நேரங்களில் ரோட்டின் இரு புறங்களிலும் டூவீலர்கள் மற்றும் வாகனங்களை நிறுத்தி செல்லும் போக்கு தொடர்கிறது.
பொதுமக்கள் கூறியதாவது:
அதிக போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக சிக்கல் நகர் பகுதி உள்ளது. ரோட்டோர ஆக்கிரமிப்புகளால் அதிகளவு இடையூறு ஏற்படுகிறது. இப்பகுதியில் அடிக்கடி விபத்து அபாயம் நிலவுகிறது. 2011ல் அமைக்கப்பட்ட பயணியர் நிழற்குடை முறையான பராமரிப்பின்றி துருப்பிடித்து வீணாகிறது. பயணிகள் உட்காருவதற்கு உரிய இடத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் பெருகி உள்ளன.
எனவே சிக்கல் போலீசார் போக்குவரத்தை காலை, மாலை நேரங்களில் முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதமடைந்த பயணிகள் நிழற்குடையில் பராமரிப்பு பணிகள் செய்ய வேண்டும் என்றனர்.
