ADDED : பிப் 03, 2025 05:02 AM

பரமக்குடி: பரமக்குடியில் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் மணல்மேடுகள் உருவாகியுள்ளதுடன் இரு புறங்களிலும் வாகனங்களை நிறுத்துவதால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் உள்ளது.
பரமக்குடியில் நான்கு வழிச்சாலை தெளிச்சாத்தநல்லுார் விலக்கு ரோட்டில் பிரிகிறது. இங்கிருந்து 5 கி.மீ.,க்கு மேல் பரமக்குடி பஸ் ஸ்டாண்ட் வழியாக அரியனேந்தல் விலக்கு ரோட்டில் மீண்டும் ரோடு இணைகிறது.
பரமக்குடி நகருக்குள் இருவழி மற்றும் ஒரு வழிச்சாலையாக தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. தொடர்ந்து மணி நகர், காட்டுப்பரமக்குடி உள்ளிட்ட ஊராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் ரோட்டோரங்களில் மணல் மேடுகள் உருவாகி உள்ளது.
இதனால் ரோட்டோரம் செல்லும் டூவீலர் உள்ளிட்ட வாகனங்கள் சறுக்கி விபத்திற்குள்ளாகின்றன. டூவீலர், கார்கள், டிராக்டர் விற்பனை நிறுவனங்கள் மற்றும் சிட்கோ என தொடர்ந்து உள்ள நிலையில் இருபுறமும் வாகனங்களை நிறுத்தி வைக்கின்றனர்.அந்த வழியாக செல்லும் பள்ளி வாகனங்கள், சைக்கிளில் செல்லும் மாணவர்கள் தடுமாற்றத்துடன் செல்லும் நிலை உள்ளது. இதனால் அவ்வப்போது விபத்துகள் நடப்பதால் உயிர் பலிகளும் ஏற்படுகின்றன.
எனவே ஒட்டுமொத்தமாக ரோட்டோர மணல்மேட்டை நெடுஞ்சாலை துறையினர் அப்புறப்படுத்துவதுடன், வாகனங்கள் நிறுத்துவதை முறைப்படுத்த போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.