/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வேளாண் உட்கட்டமைப்புகளை மேம்படுத்த... ரூ.61 கோடி ஒதுக்கீடு: விவசாயிகள் ரூ.2 கோடி வரை கடன் பெறலாம்
/
வேளாண் உட்கட்டமைப்புகளை மேம்படுத்த... ரூ.61 கோடி ஒதுக்கீடு: விவசாயிகள் ரூ.2 கோடி வரை கடன் பெறலாம்
வேளாண் உட்கட்டமைப்புகளை மேம்படுத்த... ரூ.61 கோடி ஒதுக்கீடு: விவசாயிகள் ரூ.2 கோடி வரை கடன் பெறலாம்
வேளாண் உட்கட்டமைப்புகளை மேம்படுத்த... ரூ.61 கோடி ஒதுக்கீடு: விவசாயிகள் ரூ.2 கோடி வரை கடன் பெறலாம்
ADDED : ஆக 15, 2025 11:19 PM

மத்திய அரசு வேளாண் உட்கட்டமைப்பை மேம்படுத்த நாடு முழுவதும் வங்கிகள் மூலம் ரூ.1 லட்சம் கோடி கடன் 2020-21 முதல் 2025--26 வரை வழங்க இலக்கு நிர்ணம் செய்துள்ளது. இதில் தமிழ்நாட்டிற்கு மட்டும் ரூ.5990 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் 2025--26ம் ஆண்டிற்கு ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ரூ.61 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் அதிகபட்சம் ரூ.2 கோடி வரை கடன் பெறலாம். இந்த கடனுக்கு 7 ஆண்டு காலத்திற்கு ஆண்டுக்கு 3 சதவீதம் வட்டி குறைப்பு மற்றும் அரசின் கடன் உத்திரவாதம் வழங்கப்படுகிறது.
மேலும் அரசின் மற்ற திட்டங்களில் மானியம் பெறும் விவசாயிகளும் இத்திட்டத்தில் பயன் பெறலாம். திட்ட மதிப்பீட்டில் பயனாளியின் பங்களிப்பு 10 சதவீதம்.
அறுவடைக்கு பிந்தைய மேலாண்மை திட்டங்களான மின்னணு வணிக மையங்கள், சேமிப்பு கிடங்குகள், குளிர்பதன கிடங்குகள், சிப்பம் கட்டும் கூடங்கள், பழுக்க வைக்கும் கூடங்கள், தரம் பிரிக்கும் எந்திரங்கள், முதன்மை பதப்படுத்தும் நிலையங்கள் அமைக்கலாம்.
பண்ணை சார்ந்த லாபகரமான தொழில்களான அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு ஆலை அமைத்தல், நெல் அறுவடை இயந்திரம், கரும்பு அறுவடை இயந்திரம் போன்றவை வாங்குதல் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையங்களை அமைத்தல், விவசாய நிலத்திலேயே சோலார் பம்ப் செட் அமைத்தல், ட்ரோன் வாங்குதல், இயற்கை வேளாண் இடுபொருட்கள் தயாரிப்பு மையங்கள் துவங்குதல், பண்ணைக் கழிவு மேலாண்மை சார்ந்த கட்டமைப்பு அமைத்தல், மண்புழு உரம் தயாரித்தல் மையம் அமைத்தல் மற்றும் காளான் வளர்த்தல் போன்ற செயல்பாடுகளுக்கு இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் https://agriinfra.dac.gov.in/ என்ற இணையதள முகவரியில் விரிவான திட்ட அறிக்கையுடன் தாங்கள் விரும்பும் வங்கி கிளைக்கு விண்ணப்பிக்கலாம்.
மேலும், விபரங்களை அறிய வேளாண் துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) அலுவலகம் அல்லது வேளாண் இணை இயக்குநர் அலுவலகம் அல்லது தோட்டக்கலை துணை இயக்குநர் அலுவலகம் அல்லது செயற்பொறியாளர் (வேளாண் பொறியியல்) அலுவலகம் அல்லது இணைப் பதிவாளர் (கூட்டுறவு) அலுவலகம் அல்லது பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம் அல்லது திட்ட இயக்குநர், மகளிர் திட்ட அலுவலகம் அல்லது நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளரை தொடர்பு கொள்ளலாம் என வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர்.