/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா விவசாயிகள் ஏமாற்றம்
/
ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா விவசாயிகள் ஏமாற்றம்
ADDED : டிச 01, 2024 07:03 AM
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் போதிய மழைப்பொழிவு இல்லாததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
ராமநாதபுரம் மாவட்ட நெற்களஞ்சியமாக திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாக்கள் உள்ளன. இங்கு நடப்பு ஆண்டில் 52 ஆயிரம் ஹெக்டரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. செப்.,ல் விதைப்பு செய்யப்பட்ட நெற்பயிர்கள் தற்போது வளர்ச்சி நிலையில் உள்ளது.
சில பகுதிகளில் நெற்பயிர் மகசூல் கொடுக்கும் நிலையை எட்டி உள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் இரண்டாவது பெரிய கண்மாய் என்ற சிறப்பு பெயர் பெற்ற ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் உட்பட சுற்றுப்புற பகுதியில் நுாறுக்கும் மேற்பட்ட சிறிய கண்மாய்களிலும், பருவமழை ஏமாற்றத்தால் குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே தேங்கியுள்ளது.
மாவட்டத்தில் சில வாரங்களுக்கு முன்பு பரவலாக மழை பெய்த நிலையிலும் ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சாரல் மழை மட்டுமே பெய்ததால் நெல் வயல்கள் மற்றும் கண்மாய்களில் போதிய தண்ணீர் தேங்கவில்லை.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததை தொடர்ந்து விவசாயிகள் மகிழ்ச்சியுடன் பருவமழையை எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு நிலையால் ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் சாரல் மழையுடன் மழை பெய்ததால் விவசாயிகள் ஏமாற்றத்தை சந்தித்தனர்.
இதனால் நெல் வயல்கள் மற்றும் கண்மாய்களில் உள்ள குறைந்த அளவு தண்ணீரை பயன்படுத்தி முழுமையான நெல் விவசாயத்தை பெற முடியாத நிலையில் விவசாயிகள் இக்கட்டான நிலையில் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.