/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி வைகை ஆற்றில் மணல் கொள்ளை; அதிகாரிகள் பாராமுகம்..
/
பரமக்குடி வைகை ஆற்றில் மணல் கொள்ளை; அதிகாரிகள் பாராமுகம்..
பரமக்குடி வைகை ஆற்றில் மணல் கொள்ளை; அதிகாரிகள் பாராமுகம்..
பரமக்குடி வைகை ஆற்றில் மணல் கொள்ளை; அதிகாரிகள் பாராமுகம்..
ADDED : ஜூன் 17, 2024 12:17 AM

பரமக்குடி : பரமக்குடி வைகை ஆற்றில் மணல் கொள்ளை சர்வ சாதாரணமாக நடக்கிறது. ஏனோ இதனை கட்டுப்படுத்த வேண்டிய கனிம வளத்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளல்லை. மணல் திருட்டை தடுத்து, கனிம வளத்தை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
பரமக்குடி வைகை ஆற்றில் முத்தாலம்மன் பங்குனி திருவிழா, அழகர் ஆற்றில் இறங்கும் சித்திரை திருவிழா, எமனேஸ்வரம் பெருமாள் கோயில் வைகாசி திருவிழா ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. மேலும் ஆண்டுமுழுவதும் பல்வேறு கோயில்களில் இருந்து பால்குடம் மற்றும் கரகம் எடுக்கும் நிகழ்வுகளும் ஆற்றில் நடக்கிறது.
பரமக்குடி நகர் வைகை ஆற்றில் ஊற்று நீரை மையப்படுத்தி உருவாகியுள்ளது. இத்தகைய புனிதம் வாய்ந்த வைகை, தற்போது கழிவுநீருக்கு மத்தியில் சிக்கி தவிக்கிறது.
மதுரை தொடங்கி உள்ள வைகையில், பரமக்குடி பகுதியில் மட்டுமே ஓரளவிற்கு மணற்பாங்கான பகுதிகள் உள்ளன. இதனால் ஒவ்வொரு முறை ஆற்றில் தண்ணீர் வரும் பொழுதும் பரமக்குடி மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி அடைகிறது.
மேலும் விவசாய தண்ணீர் தேவைக்கும் நல்ல பலன் அளிக்கிறது. இச்சூழலில் ஒவ்வொரு பகுதியிலும் வைகை ஆற்றில் மணல் கொள்ளை என்பது வாடிக்கையாக்கியுள்ளது.
இதனை கட்டுப்படுத்த வேண்டிய கனிம வளத்துறை, பொதுப்பணித்துறை, வருவாய், போலீஸ், நகராட்சி என எந்த அதிகாரிகளும் கண்டு கொள்வதாக தெரியவில்லை. இதனால் ஆறு முழுவதும் சந்திர மண்டலம் போல் ஆங்காங்கு பெரிய அளவிலான குழிகள் உருவாகியுள்ளது. இக்குழிகளில் கழிவுநீர் நிரம்புவதால் மக்கள் ஆபத்தான சூழலில் ஆற்றில் இறங்கி செல்லும்படி உள்ளது. ஆகவே ஆற்றின் புனிதத்தை காத்திடவும், குடிநீர் தேவையை உணர்ந்து அதிகாரிகள் மணல் கொள்ளையை தடுக்க வேண்டுமென மக்கள் வலியுறுத்தினர்.
பரமக்குடி தாசில்தார் சாந்தி கூறுகையில், வைகை ஆற்றில் மணல் கொள்ளையை தடுக்க வி.ஏ.ஓ., தலையாரிக்கள், வருவாய் துறை, பொதுப்பணித்துறை, போலீஸ் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல், தேர்வுகள் உள்ளிட்ட பணிச்சுமை காரணமாக செயல்படுத்த முடியவில்லை. ஜமாபந்தி நிறைவடைந்து வரும் நாட்களில் மணல் அள்ளுபவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.