ADDED : ஆக 06, 2025 08:37 AM
தேவிபட்டினம் : தேவிபட்டினம் கடற்கரையோர பகுதிகளில் உள்ள தோப்புகளில் மணல் திருட்டு அதிகரித்து வருவதால் கனிம வளம் சூறையாடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
தேவிபட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளான சித்தார்கோட்டை, பழனி வலசை, அம்மாரி, இலந்தை கூட்டம், புதுவலசை, கோகிலவாடி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் அதிகளவில் தோப்புகளும், பனங்காடுகளும் கூட்டம் கூட்டமாக அமைந்துள்ளன. அப்பகுதிகளில் அதிகளவு மணல் திட்டுக்களும் அமைந்துள்ளன.
இந்நிலையில், அப்பகுதியில் மணல் திருட்டுக்கு சாதகமான சூழ்நிலை நிலவுவதால் இரவு மட்டுமின்றி பகல் நேரங்களிலும், மணல் திருட்டு சர்வ சாதாரணமாக நடக்கிறது.
அப்பகுதியில் நடக்கும் மணல் திருட்டு குறித்து வருவாய்த் துறையினருக்கும், போலீசாருக்கும் தெரிந்திருந்தும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
மேலும் மணல் திருட்டு குறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கும் பொதுமக்களின் தகவல் குறித்து அதிகாரிகள் மணல் திருட்டு கும்பலுக்கு கசிய விடுவதால் புகார் தெரிவிப்பவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்படுவதால் புகார் தெரிவிப்பதற்கு பொதுமக்களும் அச்சமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுப்பதுடன், உடந்தையாக செயல்படும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.