/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
குடிநீர் தொட்டியில் உவர் நீர் கலந்து விநியோகம் பள்ளி மாணவர்கள் பாதிப்பு
/
குடிநீர் தொட்டியில் உவர் நீர் கலந்து விநியோகம் பள்ளி மாணவர்கள் பாதிப்பு
குடிநீர் தொட்டியில் உவர் நீர் கலந்து விநியோகம் பள்ளி மாணவர்கள் பாதிப்பு
குடிநீர் தொட்டியில் உவர் நீர் கலந்து விநியோகம் பள்ளி மாணவர்கள் பாதிப்பு
ADDED : செப் 07, 2025 02:52 AM

சிக்கல்: சிக்கல் அருகே சிறைக்குளம் ஊராட்சி ஆய்க்குடியில் குடிநீர் வழங்கக்கூடிய மேல்நிலைத் தொட்டியில் மோட்டார் மூலம் உவர் நீர் கலந்து வினியோகம் செய்ததால் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் தவித்தனர்.
ஆய்க்குடியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு தலைமை ஆசிரியர் மற்றும் 50க்கும் மேற்பட்ட 1 முதல் 5 வகுப்பு மாணவர்கள் படிக்கின்றனர். கடந்த 5 நாட்களுக்கும் மேலாக இப்பகுதியில் உள்ள 35 ஆயிரம் லி., மேல்நிலை நீர்த் தேக்க தொட்டியில் கிணற்றில் இருந்து உவர் நீரை மேல்நிலைத் தொட்டிக்கு மாற்றி அதிலிருந்து தெருக்களுக்கு வினியோகம் செய்வதால் அதனை உபயோகித்த பள்ளி மாணவர்கள் பெரும் சிரமத்தை சந்தித்தனர்.
இதனால் பள்ளி சமையலர் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வந்துள்ளார். ஆய்க்குடி கிராம தலைவர் மகாலிங்கம், செயலர் கருப்பையா, பொருளாளர் தட்சிணாமூர்த்தி மற்றும் பா.ஜ. முன்னாள் ஒன்றிய பொதுச் செயலாளர் கருப்புசாமி ஆகியோர் கூறியதாவது: கடலாடி யூனியனுக்கு உட்பட்ட பகுதியில் 15 வது மாநில நிதிக் குழு மூலமாக நல்ல தண்ணீர் எடுத்து குழாய்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும். ஏற்கனவே காவிரி நீர் வினியோகம் செய்யக்கூடிய 35 ஆயிரம் லி., மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் உவர் நீரை கலந்து வினியோகம் செய்கின்றனர். இதனால் பள்ளி மாணவர்கள் குடிப்பதற்கும் சத்துணவு தயாரிப்பதற்கும் தண்ணீர் இன்றி சிரமப்படுகின்றனர்.
உவர் நீரை பயன்படுத்தியதால் பள்ளி மாணவர்களுக்கு ஒவ்வாமை மற்றும் வாந்தி ஏற்பட்டது. எனவே அரசு நிதி வீணடிப்பை தவிர்க்க மேல்நிலைத் தொட்டியில் முறையாக காவிரி நீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
கடலாடி யூனியன் திட்ட குழு பி.டி.ஓ., ரவி கூறுகையில், இப்போது தான் எனது கவனத்திற்கு வந்துள்ளது. மேல்நிலைத் தொட்டியில் இருந்து முறையாக குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி மாணவர்களுக்கு நல்ல தண்ணீர் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.