/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தோட்டக்கலை பண்ணையில் பழக்கன்று உற்பத்தி
/
தோட்டக்கலை பண்ணையில் பழக்கன்று உற்பத்தி
ADDED : செப் 28, 2024 05:50 AM

திருவாடானை : திருவாடானை அருகே ஓரியூர் அரசு தோட்டக்கலை பண்ணையில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்வதில் ஏற்பட்டுள்ள தொய்வு குறித்து தினமலர் நாளிதழில் வெளியான செய்தி எதிரொலியாக பலவகை மரக்கன்றுகள், செடிகள் உற்பத்தி பணி தீவிரமடைந்துள்ளது.
வறட்சியால் பாதிக்கப்படும் விவசாயிகளின் வாழ்வாதரத்தை பாதுகாப்பதற்காக அரசு சார்பில் தோட்டக்கலை பண்ணை அமைக்கபட்டுள்ளது. திருவாடானை அருகே ஓரியூரில் 2018 ல் அரசு தோட்டக்கலை பண்ணை 36 ஏக்கரில் துவங்கப்பட்டது. இங்கு 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.
ஆரம்பத்தில் நிழல் குடில் அமைத்து பல்வேறு வகையான மரக்கன்றுகள் வளர்க்கபட்டு குறைந்த விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. விவசாயிகள் பழக்கன்றுகளை வாங்கி பயன் அடைந்தனர். நாளடைவில் உற்பத்தி வெகுவாக குறைந்தது. பூச்செடிகள் இல்லை. நிழல் வலை குடிலில் தக்காளி, பூச்செடிகள் வளர்த்து அதிக வருவாய் கிடைக்க செய்திருக்கலாம்.
ஆனால் வருவாய்க்கான முயற்சிகளை எடுக்காததால் பண்ணை பயன்படாத நிலைக்கு போகும் நிலை ஏற்பட்டது. பல ஏக்கர் நிலங்கள் தரிசாக மாறியது. விழாக்கள், பண்டிகைகள் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு வரும் விருந்தினர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கும் நடைமுறை பெருகி வருகிறது.
ஆகவே மக்கள் பயனடையும் வகையில் உற்பத்தியை பெருக்க அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செப்.13ல் தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக தற்போது பழமரக்கன்றுகள் உற்பத்தி பணிகள் தீவிரமடைந்துள்ளது.
ராமநாதபுரம் தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ஆறுமுகம் கூறியதாவது: பண்ணையில் மா வகையில் செந்துாரா, பங்களூரா, பங்கனபள்ளி, அல்போன்சா போன்ற ரகங்களும், கொய்யாவில் லக்னோ 49, பெருநெல்லியில் காஞ்சள், கிருஷ்ணா ரகங்கள், கொட்டை முந்திரியில் விருதாசலம் 3 ரகமும் தாய் மரங்களாக நடவு செய்யப்பட்டு அதிலிருந்து ஒட்டு கட்டுதல், பதியன் முறைகளில் பழக்கன்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
மேலும் வீரிய காய்கறி நாற்றுகள், குழித்தட்டு முறையில் உற்பத்தி செய்திட பசுமை குடில்கள், நிழல் வலை கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகம் அமைக்கப்பட்டு அதில் டிரைக்கோடெர்மா, விரிடி போன்ற உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படுகிறது.
மண்புழு உரம் தயார் செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பழக்கன்றுகள், வீரிய காய்கறிகள் விவசாயிகளுக்கு மானிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது என்றார்.