ADDED : ஏப் 22, 2025 05:52 AM

நாட்டு செங்கல் தயாரிப்பதற்கான களிவண்டல் மண்ணை முறையாக சேகரித்து குவித்து வைக்கின்றனர். அதில் ஊருணி நீரை ஊற்றி மண்வெட்டியால் நன்கு பிசைந்து வைத்து 24 மணி நேரம் மூன்று முறை மாறி மாறி பிசைந்து எடுக்கின்றனர்.
செங்கல் தயாரிப்பிற்குரிய பதம் வந்தவுடன் அவற்றிற்குரிய அச்சு கட்டை மூலமாக வடிவமைக்கின்றனர். மூன்று இஞ்ச் தடிமனிலும், ஒரு சாண் அளவிற்கு நீளத்திலும் மூன்று கிலோ எடை கொண்ட நாட்டுச் செங்கல் உருவாக்கப்படுகிறது.
முன்பு நாட்டுச் செங்கல் சூளைக்கென பெருவாரியான செங்கல் சூளைகள் இருந்த நிலையில் காலப்போக்கில் சிமென்ட் செங்கல், ஹாலோ பிளாக் உள்ளிட்டவைகளின் வரத்தால் நாட்டு செங்கல் உற்பத்தியிலும் பெரும் தொய்வு ஏற்பட்டது.
அரசு மூலம் பயனாளிகளுக்கு கட்டித் தரக்கூடிய வீடுகளுக்கு நாட்டுச் செங்கல் பெரும் உபயோகமாக இருந்தது. அதிர்வுகளை தாங்கும் வல்லமை மிக்கது.
வாலிநோக்கம் அருகே ஓடை குளத்தைச் சேர்ந்த நாட்டு செங்கல் உற்பத்தி செய்யும் தொழிலாளர் அந்தோணிசாமி கூறியதாவது:
இப்பகுதியில் நாட்டுச் செங்கல் பல ஆண்டுகளாக செங்கல் காளவாய் மூலமாக முறையாக செய்யப்படுகிறது.
ஒரே நேரத்தில் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் நாட்டுச் செங்கல்கள் பச்சையாக சூளையில் வைத்து அடுக்கப்பட்டு பனைமர சட்டங்கள் மற்றும் சீமை கருவேல மரக்கட்டைகள் எரிபொருளாக பயன்படுகிறது.
ஒரு செங்கல் தயாரிக்க 10 நாட்கள் வரை ஆகிறது. ஆர்டரின் பெயரில் செங்கல்களை லாரிகளில் லோடு எடுத்து அனுப்பி வைக்கிறோம்.
கோயில் கும்பாபிஷேக யாகசாலை அமைப்பதற்கு பச்சை செங்கல்கள் பயன்படுகிறது. அவற்றையும் கேட்பவர்களுக்கு கொடுக்கிறோம்.
சுட்ட செங்கல் போக்குவரத்து செலவு உட்பட ரூ. 8.50க்கு விற்கப்படுகிறது. மிஷின் கட் எனப்படும் பிரிக்ஸ் செங்கலுக்கு மத்தியில் குடிசைத் தொழிலைப் போல நாட்டுச் செங்கல் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருகிறோம்.
முன்பிருந்த நிலை மாறி தற்போது குறைவான அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது என்றார்.