பரமக்குடி பகுதிகளில் காட்டு பன்றிகளால் தொடர் ஆபத்து: கட்டுப்படுத்த கோரிக்கை
பரமக்குடி பகுதிகளில் காட்டு பன்றிகளால் தொடர் ஆபத்து: கட்டுப்படுத்த கோரிக்கை
UPDATED : அக் 10, 2026 04:08 PM
ADDED : அக் 10, 2026 04:06 PM
பரமக்குடி: பரமக்குடி அருகே கிராமங்களில் காட்டுப் பன்றிகள் தொல்லை அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பரமக்குடி அருகே அரியனேந்தல் கிராமம் பூங்கா நகரில் அங்கன்வாடி பணியாளர் காளிமுத்து 56, அக்., 7 இரவு காட்டு பன்றி தாக்கி பலியானார். ஆக., 27ல் பெருநாழி அருகே திம்மநாதபுரம் பகுதி விவசாயிகள் செல்வம் 45, முத்தழகர் 35, மாரீஸ்வரன் 31, சசிவர்ணம் 35, ஆகியோர் வயலில் வேலை செய்து கொண்டிருந்தனர்.
அங்கு வந்த பெரிய காட்டுப் பன்றி விவசாயிகளை தாக்கி காயப்படுத்தியது. மூன்று ஆண்டுகளாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் காட்டுப் பன்றிகளால் விவசாய நிலங்கள் பாதிப்படைகிறது. காட்டு பன்றிகளை கட்டுப்படுத்த அதனை சுட்டு தள்ளும் வகையில் அரசாணை டி(7)2025 ஜன., 9 அன்று பிறப்பிக்கப்பட்டது. ஆனால் வனத்துறை இது குறித்து நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது.
எனவே பயிர்களை சேதப்படுத்தியும் மற்றும் மனித உயிரினத்தை அழிக்கும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வனத்துறை, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தென் மாவட்ட விவசாயிகள் சங்க செயலாளர் மலைச்சாமி தெரிவித்தார்.
