சார்பதிவாளர் அலுவலகத்தில் சர்வர் கோளாறு: பணி முடக்கம்
சார்பதிவாளர் அலுவலகத்தில் சர்வர் கோளாறு: பணி முடக்கம்
ADDED : மார் 02, 2026 06:33 AM
திருவாடானை: திருவாடானை சார்பதிவாளர் அலுவலகத்தில் அடிக்கடி ஏற்படும் சர்வர் பிரச்னையால் பத்திரம் பதிவு செய்ய முடியாமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திருவாடானை மற்றும் அதனை சுற்றியுள்ள நுாற்றுக்கணக்கான கிராமங்களுக்கு தலைமையிடமாக இந்த சார்பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது.
இங்கு தினந்தோறும் சொத்து விற்பனை, அடமானம் மற்றும் திருமணப் பதிவுகளுக்காக ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக இங்குள்ள கணினிகளில் சர்வர் முடக்கம் காரணமாகப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றன.
தொலை துார கிராமங்களிலிருந்து வரும் பொதுமக்கள் சர்வர் பிரச்னையால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. விவசாய வேலைகளை விட்டுவிட்டு வரும் கிராமப்புற மக்களுக்கு, வேலை இழப்புடன் அலைச்சலும் மிஞ்சுவதாக வேதனை தெரிவிக்கின்றனர். பத்திரப் பதிவுக்காக ஆன்லைன் மூலம் முன்பதிவு டோக்கன் பதிவு செய்வதிலும் தாமதம் ஏற்படுகிறது.
ஒரு பத்திரம் பதிய வேண்டிய நேரத்தில் சர்வர் கோளாறால் பல மணி நேரம் தாமதமாவதால், ஒரு நாளைக்குத் திட்டமிடப்பட்ட பதிவுகளை முடிப்பதில் அலுவலர்களும் சிரமம் அடைந் துள்ளனர். இணையதள இணைப்பை சீரமைக்க உயர்மட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தடையற்ற இணைய சேவை வழங்க கூடுதல் வசதிகளைச் செய்ய வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
