/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தனுஷ்கோடியில் கடைகள் ஆக்கிரமிப்பு
/
தனுஷ்கோடியில் கடைகள் ஆக்கிரமிப்பு
ADDED : நவ 17, 2024 12:43 AM

ராமேஸ்வரம் : ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் 200 கடைகளின் ஆக்கிரமிப்பால் சுற்றுலா தலம் சந்தையாக மாறியுள்ளதுடன் சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
ராமேஸ்வரத்தில் இருந்து 24 கி.மீ., துாரத்தில் தனுஷ்கோடி, அரிச்சல்முனையில் அழகிய கடற்கரை அமைந்துள்ளது. இங்கிருந்து 30 கி.மீ.,ல் உள்ள இலங்கை கடல் பகுதியைக்காண தினமும் ஏராளமான வாகனங்களில் சுற்றுலாப்பயணிகள் வருகின்றனர். இங்கு சுற்றுலாப்பயணிகளுக்காக 20 மீனவ பெண்கள் பழங்கள் விற்றனர். காலப்போக்கில் இவர்களுக்கு போட்டியாக 120க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டு ரோட்டோரங்கள் ஆக்கிரமிப்புக்குள்ளாகின. மேலும் உணவு கழிவுகள், பிளாஸ்டிக் பாட்டில், பாலிதீன் பைகள் தனுஷ்கோடி கடலோரம் வீசப்படுவதால் கடல் வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்பட்டது.
கடந்த பிப்.,ல் அனைத்து கடைகளும் அகற்றப்பட்டன. மீண்டும் ஆக்கிரமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அப்போதைய கலெக்டர் விஷ்ணு சந்திரன் எச்சரித்தார். ஆனால் அதிகாரிகளின் ஆதரவுடன் தற்போது அரிச்சல்முனை தேசிய நெடுஞ்சாலை ரவுண்டானா, ரோட்டின் இருபுறமும் 200 கடைகள் ஆக்கிரமித்துள்ளன. இவற்றில் கடல் சங்குகள், அழகு சாதனப்பொருட்களை விற்கின்றனர்.
சுற்றுலா தலமான தனுஷ்கோடி தற்போது சந்தையாக மாறியுள்ளது. இங்கு பார்க்கிங் வசதி இல்லாத நிலையில் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை நிறுத்த இடமின்றி, சுற்றுலா பயணிகள் நடந்து சென்று அவதிப்படுகின்றனர்.
மேலும் பாலிதீன் பைகள், தீங்கு ஏற்படுத்தும் உணவுக்கழிவுகளால் கடலில் வாழும் அரிய உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி முந்தைய கலெக்டரின் உத்தரவை அமல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

