/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர் பற்றாக்குறை: தீர்வு எப்போதுங்க
/
ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர் பற்றாக்குறை: தீர்வு எப்போதுங்க
ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர் பற்றாக்குறை: தீர்வு எப்போதுங்க
ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர் பற்றாக்குறை: தீர்வு எப்போதுங்க
ADDED : ஜன 30, 2025 05:16 AM
திருவாடானை: மாவட்டம் முழுவதும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள் பற்றாக்குறையால் ஆம்புலன்ஸ் 108 ல் ஏற்றிச் செல்லும் நோயாளிகளை ராமநாதபுரம், சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல கூறுவதால் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாக்கள் அதிக கிராமங்களை உள்ளடக்கியுள்ளதால் ஆம்புலன்ஸ் 108 சேவை முழு அளவில் பயன்படுகிறது. அலைபேசியில் அழைத்த 20 நிமிடங்களில் மீட்பு பணியில் ஆம்புலன்ஸ் செயல்பட்டு வருகிறது.
திருவாடானை, தொண்டி, ஆர்.எஸ்.மங்கலம், திருப்பாலைக்குடி ஆகிய ஊர்களில் நான்கு வாகனங்கள் செயல்படுகின்றன. ஒரு ஆண்டிற்கு மூவாயிரத்திற்கும் மேற்பட்டவர்களை மீட்டு உரிய நேரத்தில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
விபத்து மற்றும் நோயால் பாதிக்கப்படுபவர்களை திருவாடானை அரசு மருத்துவமனையிலும், தொண்டி, ஆர்.எஸ்.மங்கலம், எஸ்.பி.பட்டனம், மங்களக்குடி, திருவெற்றியூர், வெள்ளையபுரம், திருவெற்றியூர் உள்ளிட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அனுமதிக்கப்பட்டு அங்கு முதலுதவி அளித்தவுடன் மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம், சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பது வழக்கம்.
ஆனால் தற்போது இப்பகுதியில் டாக்டர்கள் பற்றாக்குறையால் மதியம் 12:00 மணிக்கு மேலும், இரவு நேரங்களிலும் ஆம்புலன்ஸ் 108 ல் அழைத்து செல்லப்படும் நோயாளிகளை நேரடியாக ராமநாதபுரம், சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆம்புலன்ஸ் சென்று வர மூன்று மணி நேரத்திற்கும் மேல் ஆவதால் இப்பகுதியில் விபத்தில் சிக்குபவர்களை மீட்க அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ் கிடைக்காமல் போய்விடுகிறது.
இது குறித்து திருவாடானை மக்கள் கூறுகையில், பொதுவாக விபத்தில் சிக்குபவர்களுக்கு முதலுதவி அளித்தால் மட்டுமே அவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்கும். ஆகவே உடனடியாக முதலுதவி அளிக்க வேண்டுமென்றால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதாரம் நிலையத்திற்கு கொண்டு சென்றால் மட்டுமே நோயாளிகளுக்கு பாதுகாப்பு.
அதைவிட்டு நீண்ட துாரம் பயணம் செய்யும் நோயாளிகளின் நிலைமை கேள்விக்குறியதாகி விடும். மேலும் ஆம்புலன்ஸ் சென்று வர நீண்ட நேரம் ஆவதால் இப்பகுதியில் திடீரென பாதிக்கப்படும் மற்ற நோயாளிகளை உடனுக்குடன் மீட்க முடியாமல் போகிறது.
எனவே ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூடுதல் டாக்டர்கள் நியமித்து நோயாளிகளின் உயிரை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
---

