/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஊராட்சிகளில் குப்பை அகற்றப்பட வேண்டும்
/
ஊராட்சிகளில் குப்பை அகற்றப்பட வேண்டும்
ADDED : பிப் 17, 2025 05:38 AM

திருப்புல்லாணி : திருப்புல்லாணி ஒன்றியத்திற்குட்பட்ட 33 கிராம ஊராட்சிகளில் அதிகளவில் குப்பை சேர்ந்துள்ள நிலையில் அவற்றை அகற்ற எந்த நடவடிக்கையும் இல்லாமல் உள்ளது.
ஜன.,5ல் ஊராட்சி தலைவர்களுக்கான பதவிக்காலம் நிறைவடைந்தது. அதன் பின் பி.டி.ஓ., மண்டல துணை அலுவலர் உள்ளிட்ட தனி அலுவலர் மற்றும் ஊராட்சி செயலர் மூலமாக ஊராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.
பெரும்பாலான ஊராட்சிகளில் ஊராட்சி தலைவர்கள் இருக்கும் போது செயல்பட்ட நடைமுறைகள் பின்பற்றப்படாமல் குப்பை நாளுக்கு நாள் பெருகி வருவதால் சுகாதார சீர்கேடான நிலை ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கிராம மக்கள் கூறியதாவது: முன்பு 5 ஆண்டுகள் ஊராட்சியில் சேகரமாகும் குப்பை, சாலை வசதி, குடிநீர், மின்சார பிரச்னை உள்ளிட்ட அத்தியாவசிய பிரச்னைகளுக்கு ஊராட்சி தலைவர், துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் மூலமாக தகவல் தெரிவித்து பிரச்னைகளுக்கு தீர்வு கண்டோம்.
தற்போது உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவி காலம் நிறைவடைந்த நிலையில் ஊராட்சிகளின் செயல்பாடு முடங்கி உள்ளது. எஸ்.எப்.சி., எனப்படும் சிறப்பு நிதி ஊராட்சிகளுக்கு குறைத்து வழங்குவதால் துாய்மைப் பணியாளர்களுக்கான ஊதியம் உள்ளிட்டவைகளை மட்டுமே ஈடு செய்ய முடிகிறது.
இதனால் குப்பையை உடனுக்குடன் அகற்ற வழியில்லாததால் சமீபத்தில் பெய்த மழை நீருடன் குப்பை சேர்ந்து மர்ம காய்ச்சலுக்கு வழி ஏற்படுகிறது. பல இடங்களில் சுகாதாரம் கேள்விக்குறியாக உள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் ஊராட்சிகளுக்கு உரிய சிறப்பு நிதியை கூடுதலாக ஒதுக்கீடு செய்யவும், அத்தியாவசிய பிரச்னைகளுக்கு தனி அலுவலர்கள் கவனம் செலுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.