/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பழுதான ராமேஸ்வரம் படகை சிறைபிடித்த இலங்கை கடற்படை
/
பழுதான ராமேஸ்வரம் படகை சிறைபிடித்த இலங்கை கடற்படை
ADDED : செப் 23, 2024 02:14 AM
ராமேஸ்வரம்: -நடுக்கடலில் மீன்பிடித்த ராமேஸ்வரம் படகில் இன்ஜின் பழுதாகி நின்றதை இலங்கை கடற்படை வீரர்கள் சிறைபிடித்தனர். பின் அந்நாட்டு வீரர்கள் உதவியுடன் இன்ஜினை சரி செய்து 6 மீனவர்கள் கரை திரும்பியுள்ளனர்.
செப்., 21ல் ராமேஸ்வரத்தில் இருந்து 400 விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் வழக்கம்போல் இந்திய-- இலங்கை எல்லையில் மீன்பிடித்தனர்.
அங்கு மூன்று கப்பலில் ரோந்து வந்த இலங்கை கடற்படை வீரர்கள் துப்பாக்கி காட்டி எச்சரித்து தங்கள் பகுதி எனக்கூறி மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டினர். இதனால் பீதியடைந்த மீனவர்கள் படகுடன் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதில் 3 படகின் மீனவர்கள் கடலில் வீசிய வலையை வெட்டி மூழ்கடித்துவிட்டு வெறும் படகுடன் ராமேஸ்வரம் கரை திரும்பினர். இந்நிலையில் அன்று மதியம் 2:00 மணிக்கு ஜஸ்டின் என்பவரது படகில் இன்ஜின் பழுதாகி நடுக்கடலில் நின்றது.
உடனே படகை மடக்கி பிடித்த இலங்கை வீரர்கள், மனிதநேயத்துடன் பழுது நீக்கிட மீனவர்களுக்கு உதவினர். பின் இன்ஜினில் பழுது நீங்கியதும், 8 மணி நேரத்திற்கு பின் இரவு 10:00 மணிக்கு விடுவித்தும் 6 மீனவர்கள் ராமேஸ்வரம் கரை திரும்பி உள்ளனர்.
37 பேர் சிறையிலடைப்பு
செப்.,21 மாலை நெடுந்தீவு கடற்பரப்பில் மூன்று மீன்பிடி படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மற்றும் மயிலாடுதுறையை சேர்ந்த மீனவர்கள் 37 பேரை எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
அவர்கள் நேற்று பருத்திதுறை நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். நீதிபதி விஜயராணி மீனவர்களை அக்.,4 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.