ADDED : டிச 21, 2025 06:50 AM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் சாலையில் குளம் போல் தேங்கியுள்ள மழைநீரில் பள்ளிக்கு மாணவர்கள் அச்சத்துடன் சென்றனர்.
ராமேஸ்வரத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையால் காந்தி நகர், புதுரோடு, இந்திரா நகர், காட்டுபிள்ளையார் கோவில் தெரு உள்ளிட்ட பல தாழ்வான தெருக்களில் மழைநீர் தேங்கியது.
இதனை நகராட்சி தலைவர் நாசர்கான் முயற்சியில் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றினாலும், பல இடங்களில் முழுமையாக மழை நீரை வெளியேற்ற முடியாத அவல நிலை உள்ளது.
இந்நிலையில் காட்டு பிள்ளையார் கோவில் தெரு சாலையில் ஒரு இடத்தில் குளம்போல் தேங்கிய மழைநீரை அகற்ற முடியாமல் உள்ளது.
இச்சாலை வழியாக பள்ளிக்குச் செல்லும் சிறுவர்கள் தலையில் புத்தகப் பையை சுமந்தபடி அச்சத்துடன் கடந்து செல்கின்றனர்.
மேலும் தேங்கிய மழை நீரில் கொசுக்கள் பெருகி இரவில் மக்களை கடித்து தொந்தரவு செய்வதால் மர்ம காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. எனவே மழைநீர் அகற்றுவதுடன் கொசு மருந்து அடிக்கவும் நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
