ADDED : பிப் 14, 2026 05:38 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் செய்யது அம்மாள் இன்னோவேஷன் அண்டு இன்குபேஷன் கவுன்சில் மற்றும் ஸ்டார்ட் அப் தமிழ்நாடு இணைந்து, மாநில அளவிலான ஹேக்கத்தான் போட்டியை ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரியில் நடத்தினர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சமூக மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான அத்தியாவசிய பிரச்னைகளுக்கு புதுமையான தீர்வுகளை கண்டறியும் நோக்கில் போட்டி நடந்தது. பல்வேறு அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர். தொழில் நுட்பம் மற்றும் புதுமையை பயன்படுத்தி பல்வேறு நடைமுறை தீர்வுகளை முன்வைத்தனர்.
இதில் மிகச்சிறந்த மற்றும் சமூக பயன்பாடு அதிகம் கொண்ட தீர்வாக சீமைக்கருவேல மரங்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றும் ஆய்வுத் திட்டம் தேர்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வை சிவகாசி மெப்கோ பொறியியல் கல்லுாரி மாணவர்கள் உருவாக்கி முதல் பரிசை வென்றனர். ராமநாதபுரம் மாவட்ட கூடுதல் கலெக்டர் திவ்யான்ஷு நிகம் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்களை வழங்கினார்.
செய்யது அம்மாள் இன்னோவேஷன் அன் இன்குபேஷன் கவுன்சில் தலைமை நிர்வாக அதிகாரி கார்த்திகேயன், செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரி முதல்வர் பெரியசாமி, பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

