/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சின்ன ஏர்வாடியில் வகுப்பறைக்கு செல்வதற்கு மாணவர்கள் அச்சம்
/
சின்ன ஏர்வாடியில் வகுப்பறைக்கு செல்வதற்கு மாணவர்கள் அச்சம்
சின்ன ஏர்வாடியில் வகுப்பறைக்கு செல்வதற்கு மாணவர்கள் அச்சம்
சின்ன ஏர்வாடியில் வகுப்பறைக்கு செல்வதற்கு மாணவர்கள் அச்சம்
ADDED : டிச 12, 2024 05:03 AM

கீழக்கரை: சின்ன ஏர்வாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வகுப்பறை கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டு அடிக்கடி கூரை பெயர்ந்து விழுவதால் மாணவர்கள் வகுப்பறைக்கு செல்ல அச்சப்படுகின்றனர்.
ஏர்வாடி ஊராட்சி சின்ன ஏர்வாடியில் 6 முதல் 8 வகுப்பறை கொண்ட பள்ளி கட்டடம் உள்ளது. 2004ல் கட்டப்பட்ட வகுப்பறை கட்டடத்தில் 130 மாணவர்கள் படிக்கின்றனர். தலைமையாசிரியர் உட்பட 5 ஆசிரியர்கள் உள்ளனர்.
தரமற்ற கட்டுமானப் பணிகளால் கட்டடத்தில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டும், சுவர்களில் மழை நீர் கசிந்து தண்ணீர் வழிந்தோடுகிறது.
இதனால் பள்ளி நிர்வாகம் சார்பில் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டாலும் தரமற்ற கட்டடத்தால் அடிக்கடி பெயர்ந்து விழுகிறது. பள்ளி மேலாண்மைக் குழு தலைவி கிருஷ்ணவேணி கூறியதாவது:
வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போது அடிக்கடி கூரை சிமென்ட் பூச்சுக்கள் பெயர்ந்து விழுகிறது. சமீபத்தில் பெய்த மழையால் கட்டடத்தின் மேல் பகுதியில் தண்ணீர் கசிவு ஏற்படுகிறது. கூரை பூச்சுக்கள் மற்றும் இரும்பு கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகிறது.
இதனால் வகுப்பறையில் மாணவர்கள் பாடம் படிக்கும் போது விழுந்து விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. மாணவர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் வேண்டும். இதனால் பள்ளிக்கு மாணவர்களை அனுப்புவதற்கு அச்சமாக உள்ளது. இதுகுறித்து கலெக்டருக்கு மனு அளித்துள்ளோம்.
எனவே மாவட்ட கல்வி அலுவலர் பள்ளி யை பார்வையிட்டு இக்கட்டடத்தை அகற்றிவிட்டு புதிய கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இதுவரை கட்டடம் இல்லாதது வருத்தம் அளிக்கிறது.
மரத்தடியில் கல்வி பயிலும் நிலை உள்ளது. எனவே பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.