/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தவிக்கும் நோயாளிகள்.....: பூட்டி கிடக்கும் முதல்வர் காப்பீடு திட்ட அலுவலகம்
/
தவிக்கும் நோயாளிகள்.....: பூட்டி கிடக்கும் முதல்வர் காப்பீடு திட்ட அலுவலகம்
தவிக்கும் நோயாளிகள்.....: பூட்டி கிடக்கும் முதல்வர் காப்பீடு திட்ட அலுவலகம்
தவிக்கும் நோயாளிகள்.....: பூட்டி கிடக்கும் முதல்வர் காப்பீடு திட்ட அலுவலகம்
ADDED : ஆக 23, 2025 11:37 PM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் முதல்வர் காப்பீடு திட்ட அலுவலகம் நான்காவது மாடியில் இயங்கும் நிலையில் பல நேரங்களில் பூட்டி இருப்பதால் ஸ்கேன் எடுக்க வரும் நோயாளிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
தனியார் காப்பீட்டு நிறுவனங்களில் மருத்துவக் காப்பீடு எடுக்கும் வசதி இல்லாத ஏழை மக்களுக்காக முதல்வர் மருத்துவக் காப்பீடு திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளில் மக்கள் கட்டணம் இல்லாமல் உயர் சிகிச்சை பெற முடியும். இத்திட்டத்தில் ஆண்டுக்கு ஒரு முறை ரூ.5 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு பெற முடியும்.
பிறந்த குழந்தைகளுக்கான சிகிச்சை உட்பட 1090 சிகிச்சை முறைகளுக்கும், 52 பரிசோதனைகளுக்கும் காப்பீடு அட்டையை பயன்படுத்தலாம். பெரும்பாலான மருத்துவமனைகளில் இதற்கான சேவை மையம் மக்கள் எளிதில் அணுகும் வகையில் மருத்துவமனை நுழைவு வாயில், கீழ் தளத்தில் இயங்கி வரும்.
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பிரதான நுழைவு வாயிலில் இதற்கான மையம் அமைக்கப்பட்டும் தற்போது செயல்படாமல் உள்ளது. மருத்துவமனை நான்காவது தளத்தில் செயல்படுவதால் காப்பீடு திட்டத்தில் ஸ்கேன் எடுக்க வருவோர் நான்காவது தளத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. சிகிச்சைக்கு வந்த முதியவர் கூறியதாவது:
தனியார் ஆய்வங்களில் சிடி ஸ்கேன், இதய பரிசோதனை உள்ளிட்ட பிரச்னைகளுக்கு பரிசோதனை செய்ய ரூ.2500 முதல் ரூ.10 ஆயிரம் வரை செலவாகிறது. அரசு மருத்துவமனையில் காப்பீடுத் திட்டத்தில் இலவசமாக எடுக்க முடியும் என்பதால் ஸ்கேன் எடுக்க வந்தேன். ஆனால் கீழ் உள்ள அலுவலகம் செயல்பாட்டில் இல்லை.
பணியாளர்களிடம் கேட்டபோது நான்காவது மாடியில் அலுவலகம் உள்ளது அங்கு செல்லுமாறு அறிவுறுத்தினர். சிலர் முதல்வர் காப்பீடு திட்டத்திற்கான அட்டை வைத்திருந்தும் அதில் பதிவு செய்து வர காலதாமதாகும் என்பதால் ரூ.500 செலுத்தி ஸ்கேன் எடுத்து செல்கின்றனர் என்றார். இது குறித்து முதல்வர் காப்பீடு திட்ட அலுவலகத்தில் கேட்ட போது, கடந்த 10 நாட்களில் 66 பேர் முதல்வர் காப்பீடுத் திட்டத்தின் மூலம் ஸ்கேன் எடுக்க பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு தலா ரூ.2500 மதிப்பிலான ஸ்கேன் எடுக்க அனுமதி தரப்பட்டுள்ளது. மருத்துவமனை உள் நோயாளிகளுக்கு மருத்துவர் பரிந்துரையின் பேரில் காப்பீடு திட்டம் வழங்கிறது.
தற்போது கீழ் தளத்தில் கணினி வசதி இல்லாததால் நான்காவது தளத்தில் காப்பீடு அலுவலகம் செயல்படுகிறது. அதற்கான வசதி ஏற்படுத்தி தர கோரி மருத்துவமனை நிர்வாகத்திடம் பரிந்துரைத்துள்ளோம். நோயாளிகளின் வசதிக்காக கீழ் தளத்தில் ஒரு அலுவலர் பணியில் உள்ளார் என்றார். --

