/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கோடை நெல் விவசாயிகள் தண்ணீர் இன்றி பாதிப்பு
/
கோடை நெல் விவசாயிகள் தண்ணீர் இன்றி பாதிப்பு
ADDED : ஜூன் 11, 2025 11:15 PM
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே இருதயபுரம், நெடும்புளி கோட்டை, பொட்டக்கோட்டை, புலி வீரத்தேவன் கோட்டை, பொன்னால கோட்டை, பிச்சனாகோட்டை, நோக்கன்கோட்டை, ரெகுநாதமடை உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் 500 ஏக்கரில் கோடை நெல் சாகுபடி செய்யப்பட்டுஉள்ளது.
நெற்பயிர்கள் தற்போது பொதி (மகசூல்) பருவத்தை எட்டியுள்ளன. இந்த நிலையில் விளைச்சலுக்கு நெல் வயலில் அதிக தண்ணீர் தேவைப்படும். முழுவதுமாக பெரிய கண்மாயில் தேங்கியிருந்த தண்ணீரை மட்டுமே பயன்படுத்தி விவசாயிகள் கோடை நெல் சாகுபடி செய்துஇருந்த நிலையில் தற்போது கண்மாயில் தண்ணீர்காலியாகி விட்டதால் விவசாயிகள் செய்வதறியாது கவலையில் உள்ளனர்.
பெரும்பாலான வயல்களில் கதிர்கள் வெளிவரும் நிலையில் உள்ளன. இதனால் சில பகுதிகளில் ஆழ்துளை கிணற்று நீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். ஆழ்துளை கிணறு வசதி இல்லாத பகுதிகளில், சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்களை காப்பாற்ற வருண பகவான் வழி விடுவாரா என்று தினம் தினம் எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.