ADDED : பிப் 09, 2024 04:17 AM

முதுகுளத்துார்: முதுகுளத்துார்--பரமக்குடி சாலை கீழத்துாவல் அருகே சாலையோர பழமையான புளியமரம் முறிந்து விழுந்ததில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
முதுகுளத்துாரில் இருந்து கீழத்துாவல், கீழக்கன்னிச்சேரி, வெண்ணீர் வாய்க்கால், உடைகுளம் வழியாக பரமக்குடி செல்லும் முக்கியமான சாலையின் இரு புறங்களிலும் ஏராளமான மரங்கள் உள்ளன. கீழத்துாவல் அருகே 70 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான புளிய மரம் முறிந்து விழுந்தது.
அப்போது சாலையோர மின்கம்பி மேல் விழுந்ததில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் கீழத்துாவல், விளங்குளத்துார், சவேரியார்பட்டினம், மகிண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரண்டு மணி நேரத்திற்கு மேல் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
பின்பு மின்வாரியத் துறை பணியாளர்கள் மின் இணைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். முதுகுளத்துார்--பரமக்குடி செல்லும் முக்கியமான சாலை என்பதால் வழியில் சாலையோரத்தில் ஏராளமான பட்ட மரங்கள் உள்ளன. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே சாலையோரத்தில் பட்டை மரங்களை அகற்ற நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
