/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தேவர் குருபூஜை விழா முளைப்பாரி உற்ஸவம்: பத்து நாட்கள் விமரிசையாக நடக்கிறது
/
தேவர் குருபூஜை விழா முளைப்பாரி உற்ஸவம்: பத்து நாட்கள் விமரிசையாக நடக்கிறது
தேவர் குருபூஜை விழா முளைப்பாரி உற்ஸவம்: பத்து நாட்கள் விமரிசையாக நடக்கிறது
தேவர் குருபூஜை விழா முளைப்பாரி உற்ஸவம்: பத்து நாட்கள் விமரிசையாக நடக்கிறது
ADDED : அக் 22, 2025 12:55 AM
கடலாடி: கடலாடி நகர் தேவர் மகாசபைக்கு பாத்தியப்பட்ட தேவர் மஹாலில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலின் 8ம் ஆண்டு வருடாபிஷேக விழாவும், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் 118வது ஜெயந்தி விழாவும், 63ம் ஆண்டு குருபூஜை விழாவும் கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு அக்., 18ல் மாரியூர் கடலில் புனித நீராடி கிராம மக்கள் ஊர் காப்பு கட்டுதல் மற்றும் கொடியேற்றுதல் நடந்தது. பின்னர் முத்து எடுத்தல், இரவில் முத்து பரப்புதல் நடந்தது. அன்று இரவு வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம் நடந்தது.
தொடர்ந்து பத்து நாட்களிலும் இரவு 10:00 மணிக்கு வள்ளி திருமண நாடகம், கரகாட்டம், நையாண்டி மேளம், கதம்ப காமிக் நாடகம், பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி, ஆன்மிக சொற்பொழிவு, விளக்கு பூஜை, பூத்தட்டு எடுத்தல், மகா அபிஷேகம், அக்னி சட்டி ஊர்வலம் உள்ளிட்டவைகள் விமரிசையாக நடக்கிறது.
ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் திருவருவச் சிலைக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடக்கிறது.
அக்.,26ல் அலங்கரிக்கப்பட்ட பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ரதத்துடன் முளைப்பாரி ஊர்வலம் நடக்கிறது. மறுநாள் (அக்.,27) காலை 6:00 மணிக்கு பெரிய மாடு, நடு மாடு, சின்ன மாடு ஆகிய மூன்று பிரிவுகளில் மாட்டுவண்டி பந்தயம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கடலாடி நகர் தேவர் மகாசபை மற்றும் நகர் தேவர் இளைஞரணியினர் செய்து வருகின்றனர்.