/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வறட்சியான காலத்திலும் தாகம் தீர்க்கும் 'முகவை' ராமநாதபுரம் பெயரின் வரலாறு
/
வறட்சியான காலத்திலும் தாகம் தீர்க்கும் 'முகவை' ராமநாதபுரம் பெயரின் வரலாறு
வறட்சியான காலத்திலும் தாகம் தீர்க்கும் 'முகவை' ராமநாதபுரம் பெயரின் வரலாறு
வறட்சியான காலத்திலும் தாகம் தீர்க்கும் 'முகவை' ராமநாதபுரம் பெயரின் வரலாறு
ADDED : அக் 01, 2025 09:04 AM

ராமநாதபுரம் : உலகம் நவீனமயமாகி பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. ஊர்களின் பெயர்களிலும் மாற்றங்கள் ஏற்படுவதோடு நவீனமயமாகவும் அமைகிறது. நமது பெயர்களைச் சுருக்கிச் செல்லமாக அழைப்பதுப்போல் ஊர்களின் பெயர்களையும் ஐ யில் முடிவது போல் செல்லமாக அழைக்கப்படுகிறது.
கோயம்புத்துாரை 'கோவை' திருநெல்வேலியை 'நெல்லை' முதுகுளத்தூரை 'முதுவை' நாகப்பட்டினத்தை 'நாகை' என அழைக்கின்றனர்.இவை எல்லாம் ஊர் பெயரின் சுருக்கமாகவே காணப்படுகின்றன. ஆனால் ராமநாதபுரத்திற்கு 'முகவை' என அழைப்பது அதன் பெயருடன் தொடர்பு இல்லாமல் உள்ளது. அதற்கு காரணம்'முகவை' என்பது ஒரு காரணப் பெயர்.
முகவை என்ற சொல், சங்க இலக்கியம், நாட்டுப்புற பாடல்களில் கொள்கை (அளவு), அகப்பை, நீர் முகக்கும் கருவி எனும் பொருளை தருகிறது. அகநானுாறில் 'முகவை' என்பது நெல்லை அளவிடும் கருவியாகவும், பதிற்றுப்பத்தில் நீர் இறைக்கும் முறையை
பொன்செய் கணிச்சித் திண்பிணி உடைத்துச் சிரறு சில ஊறிய நீர்வாய்ப் பத்தல்கயிறு குறு முகவை மூயின மொய்க்கும்மா கெழு கொங்கர் நாடு அகப்படுத்த என குறிப்பிடப்பட்டுள்ளது.
பண்டைய தமிழர்களின் பொழுது போக்கில் நாட்டுப்புறப்பாடல் முக்கிய இடம் பெறுகிறது.
வயல் களத்தில் சூல் அடிக்கும் போது நெல்லை பாத்திரத்தால் முகந்து அல்லி காற்றில் துாத்தி, துாசி நீக்கி பொலி சேர்ப்பார்கள். அத்தகைய சமயத்தில் முகவைப் பாட்டு, பொலிப்பாட்டு போன்ற நாட்டுப்புறப்பாடல்கள் பாடப்பட்டுள்ளன.
இதுகுறித்துராமநாதபுரம் தொல்லியல்வரலாற்று ஆய்வாளர் உ.விஜயராமு கூறியதாவது:
முகவை ஊருணி கி.பி.1678 வரை போகலுார் சேதுபதி மன்னர்களின் தலைமையிடமாக இருந்தது. இருந்தாலும் அலுவல்கள் அனைத்தும் ராமநாதபுரம் கோட்டையில் தான் இருந்தது. இதனால் ஏற்படும் காலவிரையங்களை தவிர்க்க போகலுாரில் இருந்து ராமநாதபுரத்திற்கு தலைநகர் மாற்றப்பட்டது.
இதற்காக ஏற்கனவே இருந்த மண் கோட்டையைஇடித்து விட்டு 5 அடி அகலம், 27 அடி உயரம் கொண்ட கற்கோட்டையை கிழவன் சேதுபதி கட்டினார்.
கோட்டையைச் சுற்றிலும் அகலி உண்டாக்கி அதன் நடுவே அரண்மனை அமைத்தார். கோட்டையின் உள் நிர்வாகிகளுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.
கோட்டையின் வடமேற்கு மூலையில் ஊருணியை வெட்டி, மழைக்காலத்தில் தண்ணீர் தேக்கி வைக்க வழிவகை செய்தார். இங்கிருந்து தண்ணீரைக் (முகவை மூலம்) கமலம் கொண்டு முகர்ந்து இறைத்து கால்வாய் மூலமாக அரண்மனை தேவைக்கு கொண்டு சென்றனர்.
ஊருணியில் உள்ள தண்ணீரை முகந்து தான் பயன்படுத்த வேண்டும், நேரடியாக பயன்படுத்த கூடாது என்பது விதி.இதனால் 'முகவை ஊருணி' என பெயர் பெற்றது. இதனை தந்த கிழவன் சேதுபதிக்கு 'முகவை ஊருணி தந்த ஐயா' என பட்டம் வழங்கினர்.
அத்தாணி மண்டபத்தின் வட பகுதியில் மன்னர் நீராடுவதற்கு நீச்சல் குளம் அமைக்கப்பட்டது.
முகவை ஊருணியில் இருந்து நீச்சல் குளத்தின் நீர் செல்லும் வகையில் ஏற்பாடு செய்திருந்தனர். ஜமீன்தார் ஆட்சியில் நீச்சல் குளம் பயனற்றதாகி பின்பு விளையாடும் இடமாக இருந்தது.
விரிவாக்கம் கி.பி 1772 ஜூன் 3ல் ராமநாதபுரம் அரண்மனையை கைப்பற்றிய ஆங்கிலேயர் ஸ்மித் அதன் அழகை பதிவு செய்துள்ளார்.முகவை ஊருணி, அரண்மனைக்கும், அப்பகுதி மக்களின் நீர் தேவைக்கு மட்டும் பயன்பட்டது.
ராமநாதபுரத்தின் மற்ற பகுதி மக்களும் நல்ல குடிநீர் பருக வேண்டும் என்பதற்காக லட்சுமிபுரம் ஊருணி, நீலகண்டி ஊருணி, பேராவூர் ஊருணி, நொச்சி ஊருணி, கிடாவெட்டி ஊருணி, குண்டூருணி, செட்டியூருணி, அல்லிக் கண்மாயூருணி என 20க்கும் மேற்பட்ட 'முகவை' ஊருணிகளை தோற்றுவித்தனர்.
சிலர் முகவை என்பதற்கு பல கருத்துக்களை கூறினாலும், முகவை ஊருணிகள் நிறைந்த ஊராக ராமநாதபுரம் இருந்ததால் தான் இவ்வூருக்கு 'முகவை' என்ற செல்லப் பெயர் ஏற்பட்டது என்பதே சரியான காரணம். ஊருணிகள் நிறைந்து இருந்ததால் வறட்சியான காலத்திலும் தண்ணீர் பற்றாக்குறை இல்லாமல் ராமநாதபுரம் மக்கள் வாழ்ந்தனர்.
ரகுநாத சமுத்திரம் வைகை ஆறு மதுரை சீமையில் உருவாகி சேது சீமை வழியாகவங்கக்கடலில் கலந்து வீணாகியது. அந்நீரை செம்மையாகப் பயன்படுத்த முத்து விஜய ரகுநாத சேதுபதி (கி.பி 1710 --1720 ) ஒரு திட்டத்தை வகுத்தார்.
ராமநாதபுரத்திற்கு மேற்கே உள்ள காவனுாரில் பெரிய நீர்த்தேக்கம் உருவாக்கி வைகை ஆற்றின் நீரை சேமித்து வைத்தார். இதற்கு ஸ்ரீராமரது பெயரான ரகுநாத சமுத்திரம் என்ற பெயரிட்டார்.
இதனால் ராமநாதபுரம் குடிநீர் தட்டுபாடில்லாமல் இருந்தது குறிப்பிடதக்கது,
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.