ADDED : அக் 09, 2025 11:11 PM

ராமநாதபுரம்: ராமநாதபுரம்மாவட்ட காங்., சார்பில் மத்திய பா.ஜ., அரசு, தேர்தல் கமிஷன் இணைந்து வாக்காளர் பட்டியலில் முறைகேட்டில் ஈடுபடுவதாக கண்டனம் தெரிவித்து ராமநாதபுரம் அரண்மனை அருகே கையெழுத்து இயக்கம் நடந்தது.
மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ராஜாராம் பண்டியன் தலைமை வகித்தார்.தேசிய மீனவர் காங்., தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ, பொறுப்புக்குழு உறுப்பினரான முன்னாள் மாவட்டத்தலைவர் செல்லத்துரை அப்துல்லா முன்னிலை வகித்தனர். சட்டசபை காங்., தலைவர் ராஜேஷ்குமார் கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்து, பா.ஜ., அரசும், தேர்தல் கமிஷனும் இணைந்து வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்கிறது. ஓட்டு திருட்டில் ஈடுபடுகிறது என குற்றம் சாட்டி பேசினார்.
இதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த கையெழுத்து இயக்கம் நடந்தது. வியாபாரிகள், பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றனர். மாவட்டத்தில் 4 சட்டசபை தொகுதிகளிலும் தலா 50 ஆயிரம் பேரிடம் கையொப்பம் வாங்க திட்டமிட்டுள்ளனர். நிகழ்ச்சியில் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.