ADDED : ஆக 27, 2025 12:03 AM

ராமநாதபுரம் : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பூக்கள், பூஜைப்பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று (ஆக.,27) கோலகலமாக கொண்டாடப்படுகிறது. தொடர்ந்து முகூர்த்த தினம் வருவதால் பூஜை பொருட்கள், பூக்களின் விலை 3 மடங்கு வரை உயர்ந்துள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு வடிவங்களில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வந்துள்ளன. ராமநாதபுரம் சந்தையில் ரூ.100 முதல் விநாயகர் சிலைகள் விற்கப்படுகின்றன.
வாழை இலை ஒரு கட்டு சாதாரண நாட்களில் ரூ.800 முதல் ரூ.1200 வரை விற்கப்படும். நேற்று ரூ.1500 முதல் ரூ.2200 வரை விற்பனையாகியது. சில்லரை விற்பனையில் ஒரு இலை ரூ.10 என விற்கப்பட்டது. கிலோ மல்லிகை சாதாரண நாட்களில் ரூ.400 முதல் ரூ.600 வரை விற்பனையாகும். நேற்று ரூ.1700 க்கும், முல்லை ரூ.1200 க்கும், செண்டு பூ ரூ.140க்கும், ரோஜா ரூ.340 க்கும் விற்பனையானது.
ராமநாதபுரம் மாவட்ட வர்த்தகர் சங்கத் தலைவர் ஜெகதீசன் கூறுகையில், பண்டிகை நாட்களில் தேவை அதிகம் இருப்பதால் விலை அதிகரிக்கும். ஓரிரு நாட்களுக்கு இது போன்று விலை உயர்வு இருக்கும். அதன் பின் வழக்கமான விலையில் விற்கப்படும். இருமடங்கு விலை உயர்ந்தாலும், வழக்கத்தை விட அதிகமாக விற்பனை நடக்கிறது என்றார்.